Published : 06 Jul 2023 06:19 AM
Last Updated : 06 Jul 2023 06:19 AM

போட்டி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 29 பேர் ஆதரவு - என்சிபி பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் மனு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) எம்எல்ஏக்களின் ஆதரவு யாருக்கு என்பதை நிரூபிக்கும் வகையில் அக்கட்சித் தலைவர்கள் சரத் பவார், அஜித் பவார் ஆகியோர் போட்டி கூட்டம் நடத்தினர்.

இதில் சரத் பவாருக்கு ஆதரவாக 13 எம்எல்ஏக்களும், அஜித் பவாருக்கு ஆதரவாக 29 எம்எல்ஏக்களும் வந்திருந்தனர். இந்நிலையில் கட்சியின் பெயர், சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் தரப்பினர் மனு கொடுத்துள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனராக இருப்பவர் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவார். இவரது அண்ணன் மகனும், எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவார், 8 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். இதையடுத்து, அஜித் பவார் துணை முதல்வராகவும், 8 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர்.

மொத்தம் 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர பேரவையில் தேசியவாத காங்கிரஸின் 53 எம்எல்ஏ-க்களில் 40 பேரின் ஆதரவு தனக்கு உள்ளதாக அஜித் பவார் தெரிவித்தார்.

ஆனால், அஜித் பவாருக்கு 13 எம்எல்ஏ-க்களுக்கு மேல் ஆதரவு இல்லை என்றும், பெரும்பாலான எம்எல்ஏ-க்களின் ஆதரவு சரத் பவாருக்குதான் உள்ளது என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் கட்சிப் பிளவு விவகாரம் குறித்து சட்டப் போராட்டம் நடத்தப்போவதில்லை என்றும், மக்களிடம் இது குறித்து கொண்டு செல்ல உள்ளேன் என்றும் சரத்பவார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சட்ட நிபுணர்களுடன் சரத் பவார் ஆலோசனை நடத்தியதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சரத் பவாரை கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். அதன்பின்னர் மகா விகாஸ் அகாடி (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் பிரிவு) கூட்டணி தொடர்வதாகவும் அவர்கள் சரத் பவாரிடம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸின் 45 எம்எல்ஏ-க்களில் 39 பேர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறும்போது, “தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க பாஜக மேற்கொண்ட சதித் திட்டத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கிறது. மகா விகாஸ் அகாடி கூட்டணி ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்தும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆளும் அரசில் உள்ளதா அல்லது எதிர்க்கட்சியாக உள்ளதா என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர பேரவைத் தலைவர் ராகுல் நார்வேக்கர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பதவி ஏற்ற அஜித் பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சரத்பவார் தரப்பு மகாராஷ்டிர சட்டப் பேரவை சபாநாயகர் ராகுல் நார்வேக்கரிடம் கடிதம் கொடுத்துள்ளது

இந்நிலையில் சரத் பவாரும், அஜித் பவாரும் கூட்டியுள்ள எம்எல்ஏ-க்களின் போட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்க வேண்டும் என்று சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைமை கொறடா ஜிதேந்திர அவாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தெற்கு மும்பையில் உள்ள மும்பை எஜுகேஷன் டிரஸ்ட் வளாகத்தில் காலை 11 மணிக்கு அஜித் பவாரின் கூட்டமும், பாந்த்ராவில் உள்ள ஒய்.பி.சவாண்மையத்தில் பிற்பகல் ஒரு மணிக்கு சரத் பவாரின் கூட்டமும் நடைபெற்றது. இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அஜித் பவார் நடத்திய கூட்டத்தில் 29 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

சரத் பவார் கூட்டிய கூட்டத்தில் 13 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். ஒரு சில எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசும்போது அஜித் பவார் கூறியதாவது: 2024 மக்களவைத் தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெற வேண்டும். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம். எனவே, உங்கள் தொகுதியில் முழுமை பெறாமல் திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா என்று எம்எல்ஏக்கள் ஆய்வு செய்யவேண்டும். நிதி பற்றாக்குறை காரணமாக முழுமை அடையாமல் உள்ள திட்டங்கள் குறித்து என்னிடம் தெரிவித்தால் அதற்குரிய நிதியைப் பெற்றுத் தருவேன்.

யாருக்கு ஆதரவைத் தரவேண்டும் என்பதில் நடைமுறைக்குத் தகுந்தபடி முடிவெடுங்கள். சரத் பவாருக்கு நீங்கள் மரியாதை கொடுத்து வந்தீர்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. எனவே, கால ஓட்டத்துக்குத் தகுந்த முடிவெடுக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு எனது ஆதரவு எம்எல்ஏக்கள் பணியாற்ற வேண்டும். சரத் பவாரின் கூட்டத்துக்குச் சென்றுள்ள எம்எல்ஏக்கள் சிலரும் என்னுடன் பேசி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து தனது ஆதரவு எம்எல்ஏக்களிடம் ஆவணத்தில் கையெழுத்தை அஜித் பவார் பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. மேலும் இந்தக் கடிதங்களைக் கொண்டு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து கட்சியின் பெயரை, சின்னத்தையும் கேட்க அவர்கள் முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே நேற்று மாலை, அஜித் பவார் தரப்பு தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளது. அந்த மனுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்க வேண்டும் என்று அஜித் பவார்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x