Published : 05 Jul 2023 04:37 PM
Last Updated : 05 Jul 2023 04:37 PM
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்திவிட்டதாக தன்னை சிலர் வில்லன் போல் சித்தரித்தால், அது அநீதி என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், கடந்த ஜூலை 2 மதியம் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்து துணை முதல்வரானார். மேலும், தாங்களே உண்மையான தேசிவாத காங்கிரஸ் எனவும் அவர் உரிமை கோரி வருகிறார். இது மகாராஷ்டிரா அரசியில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் மாற்றங்களை சிவசேனா (உத்தவ் பால் தாக்கரே) பிரிவுத் தலைவர் உத்தவ் தாக்கரே, ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக, சிவசேனா (ஷிண்டே பிரிவு) என அனைத்துத் தரப்பும் உற்று நோக்கி வருகிறது.
இந்த நிலையில், கட்சியின் எம்எல்ஏக்களில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்க பவார் vs பவார் அணிகள் மும்பையில் இன்று தனித்தனியாக கூடின. அஜித் பவார் தலைமையில் நடந்த கூட்டத்தில் அவர் பேசிய சில விஷயங்கள் தற்போது வெளியாகி விவாதப் பொருளாக மாறியுள்ளன.
என்ன பேசினார் அஜித் பவார்? - “தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் என்னை சிலர் வில்லன் போலவும் சரத் பவாரை கடவுள் போலவும் சித்தரித்தனர். இது எனக்கு எதிரான அநீதி. நாம் இன்னாருக்குத் தான் பிறக்க வேண்டும் என்று நாம் தீர்மானிக்க முடியாது. அதில் என் தவறு ஏதும் இல்லை.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் நிச்சயமாக மகாராஷ்டிரா முதல்வராகி இருக்க முடியும். சரத் பவார் மட்டும் நான் சொன்னதைக் கேட்டிருந்தால் அது என்றோ நடந்திருக்கும். 2004 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னால் என்சிபி கட்சிக்கு காங்கிரஸை விட அதிக பலம் இருந்தது. ஆனால், எம்எல்ஏக்கள் பலம் இருந்தும் காங்கிரஸுக்கு முதல்வர் பதவி விட்டுக் கொடுக்கப்பட்டது. 2017-ல் முதல்வரின் ஆதிகாரபூர்வ இல்லத்தில் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பாஜக தலைவர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சரவைப் பதவிகள் பற்றி ஆலோசனை நீண்டது. ஆனால், கட்சித் தலைமை அதிலிருந்து பின்வாங்கியது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள் அனைவரும் கடிதம் எழுதினர். கட்சித் தலைமைக்கு அவர்கள் எழுதிய கடிதத்தின் புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. ஆனால், ஏன் கட்சித் தலைவர் சரத் பவார் பிடிவாதம் காட்டினார் என்று எங்களுக்குப் புரியவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையில் ஈடுபடுகிறார். அண்மையில் பாட்னாவில் எதிர்க்கட்சியினர் கூடினர். அனைவரும் மதிய விருந்து அருந்திவிட்டு திரும்பிச் சென்றனர். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னரும் மோடிதான் பிரதமராகப் போகிறார்.
அரசியலில் பலரும் 75 வயதில் ஓய்வு பெற்று விடுகின்றனர். ஆனால், 83 வயதாகியும் ஏன் சரத் பவார் ஓய்வை விரும்பவில்லை. இளைய தலைமுறையினருக்கு வழிவிடுங்கள். நாங்கள் சொல்வது சரியென்றால் ஊக்குவிக்கவும். தவறென்றால் வழிநடத்தவும். நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு உங்கள் முடிவுகளை சுயமாக எடுங்கள். அதைவிடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்திவிட்டதாக தன்னை சிலர் வில்லன் போல் சித்தரித்தால், அது அநீதி.
நான் ஐந்து முறை துணை முதல்வராக இருந்துவிட்டேன். எனக்கும் முதல்வராக வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது. மகாராஷ்டிரா மக்களுக்காக நல்ல பல திட்டங்களை வகுக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது” என்று அஜித் பவார் பேசினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 53 பேரில் 31 பேர் அஜித் பவாருக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், அஜித் பவார் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்துக்கு உரிமை கோரவிருக்கிறார்.
அதிகாரப் பசி இல்லை: மறுபக்கம் தனது தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், "எங்களுக்கு ஒருபோதும் அதிகாரப் பசி இல்லை. நாங்கள் மக்கள் நலனுக்காக அரசியல் செய்ய விரும்புகிறோம்" என்று சரத் பவார் கூறியுள்ளார். மேலும் கட்சியும், சின்னமும் தன் பக்கமே இருப்பதாகவும் சரத் பவார் கூறியுள்ளார்.
சுப்ரியா சூலே பதிலடி: சரத் பவாரின் வயதைக் குறிப்பிட்டுப் பேசிய அஜித் பவாருக்கு சுப்ரியா சூலே பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், "சிலர் வயது மூப்பு, ஓய்வு பற்றிப் பேசுகின்றனர். அமிதாப் பச்சன், ரத்தன் டாடா, வாரன் புஃபட் ஆகியோருக்கும் தான் வயதாகிறது. ஃபரூக் அப்துல்லா சரத் பவாரைவிட 3 வயது மூத்தவர். அதனால் சரத் பவார் தொடர்ந்து அரசியலில் இயங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT