Published : 05 Jul 2023 01:49 PM
Last Updated : 05 Jul 2023 01:49 PM
மீரட்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரவீன் குமார், சாலை விபத்தில் காயமின்றி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்தில் அவருடன் அவரது மகனும் இருந்துள்ளார். அவருக்கும் காயம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அவர் பயணித்த காரும், வேகமாக வந்த கேன்டர் கனரக வாகனமும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லேண்ட் ரோவர் டிஃபன்டர் காரில் பிரவீன் குமார் பயணித்துள்ளார். இந்த விபத்தை ஏற்படுத்திய கேன்டர் வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதான பிரவீன் குமார், இந்திய அணிக்காக 2007 முதல் 2012 வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர். 6 டெஸ்ட், 68 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 112 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
கடந்த ஓராண்டு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் இரண்டாவது முறையாக சாலை விபத்தில் சிக்கிய நிகழ்வாக இது அமைந்துள்ளது. கடந்த டிசம்பரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், கார் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் காயத்திலிருந்து மீண்டு வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT