Published : 05 Jul 2023 01:17 PM
Last Updated : 05 Jul 2023 01:17 PM
மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்க அஜித் பவார் மற்றும் சரத் பவார் அணிகள் இன்று (ஜூலை5) மும்பையில் தனித்தனியாக கூடுகின்றன.
என்சிபி தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்து துணை முதல்வரானார். மேலும் தாங்களே உண்மையான தேசிவாத காங்கிரஸ் எனவும் கூறியுள்ளார். இது மகாராஷ்டிரா அரசியில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கட்சியின் எம்எல்ஏக்களில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்க பவார் vs பவார் அணிகள் மும்பையில் இன்று தனித்தனியாக கூடுகின்றன.
இதற்தாக, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணி, அக்கட்சியின் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும், புதன்கிழமை மதியம் 1 மணியளவில் மும்பை நரிமன்பாயின்டில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது. கட்சியின் புதிய கொரடாவாக ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்ட ஜித்தேந்திர அவ்ஹத் இதனை தெரிவித்துள்ளார். அதேபோல் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, "சரத் பவாரின் வழிகாட்டுதலை ஏற்று கட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக பெரும் அளவிலான கட்சித்தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் இன்றயை கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்" என்று காணொலி வாயிலாக கேட்டுக்கொண்டார்.
இதனிடையே மகாராஷ்டிரா துணைமுதல்வர் அஜித் பவார் தலைமையிலான கிளர்ச்சி அணி கட்சியின் பெருவாரியான ஆதரவு தங்களுக்கு இருப்பதை நிரூபிக்க பாந்திராவில் தனியாக ஒரு கூட்டத்தினை நடத்துகின்றது.
இந்த கூட்டங்களுக்காக மும்பையின் பல்வேறு பகுதிகளில் சரத் பவார் மற்றும் அஜித் பவாருக்கு ஆதரவு கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. சரத்பவாரின் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பதாகையில் 83 வயது போர் வீரனாக சரத் பவார் சித்தரிக்கப்பட்டுள்ளார். அஜித் பவார் அணியின் போஸ்டர்களில் என்சிபியின் போராளிகளின் படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
கடந்த வாரத்தில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்த அஜித் பவார், அதற்கு அடுத்த சிலமணி நேரத்தில் எதிரணியினருடன் இணைந்து துணைமுதல்வராக பதவியேற்றார். அவருடன் என்சிபி-ஐச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் என்சிபிக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் 40 பேரின் ஆதரவு அஜித் பவாருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சரத் பவார் அணியின் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில் கையெழுத்திட்ட எம்எல்ஏக்களில் பலருக்கு எதில் அவர்கள் கையெழுத்திட்டார்கள் என்பதே தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT