Published : 05 Jul 2023 09:23 AM
Last Updated : 05 Jul 2023 09:23 AM

ஒடிசா ரயில் விபத்துக்கு மனித தவறே காரணம்: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கையில் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி: கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பாஹாநாகா பஜார் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 293 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தார். அதன் சாராம்சம் வருமாறு:

விபத்து நேரிட்ட நாளில் பாஹாநாகர் பஜார் ரயில் நிலையம் அருகேயுள்ள இணைப்பு தண்டவாளத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. எனவே பிரதான தண்டவாளம் வழியாக கோரமண்டல் ரயில் கடந்து சென்றிருக்க வேண்டும். ஆனால் தவறான சிக்னல் காரணமாக இணைப்பு தண்டவாளத்தில் செல்ல கோரமண்டல் ரயிலுக்கு சிக்னல் கிடைத்திருக்கிறது.

அதேநேரம் ஸ்டேஷன் மாஸ்டரின் பேனலில் பிரதான தண்டவாளம் வழியாகவே கோரமண்டல் ரயில் கடந்து செல்லும் என்று காட்டப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்டேஷன் மாஸ்டரால் சிக்னல் கோளாறை கண்டுபிடிக்க முடியவில்லை. எனது விசாரணையின்படி, தவறான சிக்னல் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கிறது.

பாஹாநாகா பஜார் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டில் சிக்னல் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. அப்போது சிக்னல் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று தெரிகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு மே 16-ம் தேதி தென் கிழக்கு ரயில்வேயின் கோரக்பூர் பிரிவில் இதேபோல சிக்னல் கோளாறு கண்டறியப்பட்டது. இதற்கு தவறான வயரிங்கே காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போதே விழிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பாஹாநாகா பஜார் பகுதியிலும் இதேபோல சிக்னல் கோளாறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதை அதிகாரிகள் முறையாக கண்காணிக்கவில்லை.

மனித தவறால் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ரயில்வேயின் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு பொறுப்பேற்க வேண்டும். இனிவரும் காலங்களில் சிக்னல் அமைக்கும்போது வழிகாட்டு நெறிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x