Published : 05 Jul 2023 06:59 AM
Last Updated : 05 Jul 2023 06:59 AM

தீவிரவாத ஒழிப்பில் இரட்டை நிலைப்பாடு ஏன்?: ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி ஆவேசம்

புதுடெல்லி: தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என்று, ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகள் இணைந்து 2001-ல் ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை’ (எஸ்சிஓ) உருவாக்கின. 2017-ல் இந்தியாவும், பாகிஸ்தானும் அமைப்பின் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டன. கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி சாமர்கண்ட் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில், எஸ்சிஓ அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. இந்நிலையில், அமைப்பின் மாநாடு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.

இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் எஸ்சிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம், நாடுகளிடையிலான போக்குவரத்து தொடர்பை வலுப்படுத்துவது, ஆப்கானிஸ்தான் நிலவரம், உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மாநாட்டைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது: எஸ்சிஓ அமைப்பின் குடும்பத்தில், புதிய உறுப்பினராக இணைந்துள்ள ஈரான் நாட்டை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான மொழித் தளத்தைப் பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தீவிரவாதம் என்பது பிராந்திய மற்றும் உலக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்துப் போராட வேண்டும்.

சில நாடுகள் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை, தங்கள் கொள்கைகளின் கருவியாக வைத்துப் பயன்படுத்துகின்றன. மேலும் சில நாடுகள், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. அத்தகைய நாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்க, எஸ்சிஓ அமைப்பு தயங்கக்கூடாது. அவற்றை எஸ்சிஓ நாடுகள் கண்டிக்க வேண்டும்.

தீவிரவாத ஒழிப்பில் இரட்டை நிலைப்பாடு எடுப்பது எதற்காக? தீவிரவாதத்தை எதிர்ப்பதில் எந்த நாடும் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கக் கூடாது. ஆப்கானிஸ்தான் மக்களின் நலனுக்காக ஒன்றுபட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அண்டை நாடுகளில் அமைதியின்மையைப் பரப்பவோ அல்லது தீவிரவாத சித்தாந்தங்களை ஊக்குவிக்கவோ ஆப்கானிஸ்தான் நிலம் ஒருபோதும் பயன்படுத்தப்படாமல் இருப்பது முக்கியம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மோடிக்கு நன்றி: புதின்

மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசும்போது, "உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்த, இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி. தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுதல், அவற்றை ஊக்குவிக்கும் நாடுகளைத் தடுப்பது, போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது ஆகியவைதான் எஸ்சிஓ அமைப்பின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். வெளிநாட்டு வர்த்தகத்தில் உள்நாட்டு கரன்சிகளை ஊக்குவிக்கும் நாடுகளுடன் உறவை மேம்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. அதுபோன்ற நாடுகளுடன் ஓர் அமைப்பை ஏற்படுத்தவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x