Published : 04 Jul 2023 05:07 PM
Last Updated : 04 Jul 2023 05:07 PM
மும்பை: "சிவசேனாவுடன் கூட்டணி சாத்தியமென்றால், பாஜகவுடன் ஏற்படுத்த ஏன் தயக்கம்?" என்று பிரபுல் படேல் கேள்வி எழுப்பியுள்ளார். மராத்தி செய்தி சேனலுக்கு அவர் அளித்தப் பிரத்யேகப் பேட்டியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவின் பிண்ணனி தொடங்கி தற்போதைய சூழல் வரை பல விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். மேலும், தனது பேச்சைத் தொடர்ந்து சரத் பவார் தன் மீது கொள்ளும் உணர்வு எதுவாக இருந்தாலும், அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான அஜித் பவார் இணைந்தார். அவர் துணை முதல்வராகவும், அவருடன் மேலும் 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு, அம்மாநில அரசுக்கு மட்டுமல்லாமல் 2024 மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகும் எதிர்க்கட்சிகள் அனைத்துக்குமே ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கணிக்கப்படுகிறது.
இந்நிலையில், அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபுல் படேல் அளித்த பேட்டி ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது. அதில் அவர், “தேசியவாத காங்கிரஸ் கட்சியால் சிவசேனாவுடன் கூட்டணியை ஏற்படுத்த முடிகிறது என்றால், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் மட்டும் ஏன் தயக்கம் ஏற்பட வேண்டும்? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்த மாகா விகாஸ் அகாதி கூட்டணி 2022-ல் சரிந்தபோதே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 53 எம்எல்ஏ.க்களில் 51 பேர் சரத் பவாரிடம் பாஜக கூட்டணியை பரிசீலிக்குமாறு கூறினார்கள்.
கடந்த ஆண்டு கட்சிக்குள் எம்எல்ஏக்கள் மத்தியில் இது தொடர்பான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முடிவு ஏதும் எட்டப்படவில்லை. அந்த முடிவுக்கு இப்போது ஒரு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நிச்சயமாக அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு, எனது தனிப்பட்ட முடிவு என்றெல்லாம் சொல்வதைவிட, கட்சியினர் சேர்ந்து எடுத்த முடிவு என்று சொல்லலாம்.
முதன்முதலில் பாஜகவுடன் இணைவது பற்றி குரல் எழுப்பியவர் ஜெயந்த் பட்டீல். அவர்தான் அந்த 51 பேரில் முதன்மையானவர். அனில் தேஷ்முக், நவாப் மாலிக் மட்டுமே அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இணையவில்லை. அதனைத் தொடர்ந்து எம் எல் ஏ.க்கள் சரத் பவாருக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வெளியில் நிற்கக் கூடாது. அதனால், அரசுடன் இணைவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர்.
கட்சித் தலைமை அதற்கு செவி சாய்க்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்கலாம். ஒன்று இறுதி முடிவை அவர்கள் எட்டாமல் இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் அவர்களுக்கு எங்களின் தேவை இல்லாமல் இருந்திருக்கலாம்.
கட்சித் தலைவர் சரத் பவாருக்கு நெருக்கமானவராக நான் அறியப்பட்டாலும் கூட, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் திடீரென ராஜினாமா முடிவை அறிவிக்கும் வரை எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.
எனது முடிவால் சரத் பவார் நிச்சயம் அதிருப்தியடைந்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். அதையுமீறி அவர் என் மீது என்னவிதமான உணர்வைக் கடத்தினாலும் அதை நான் எதிர்கொள்ளத் தயராகவே இருக்கிறேன். கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நான் கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை.
இந்தச் சூழலில் சட்டப்பேரவை சபாநாயகரிடம் ஜெயந்த் பட்டீல் அஜித் பவார் உள்பட 9 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கம் பற்றி மனு கொடுத்துள்ளார். கட்சியில் சமீபகாலமாக தேர்தலே நடைபெறவில்லை. அதனால் கட்சிக்கு மாநிலத் தலைமைப் பொறுப்பில் யாரும் இல்லை. எனவே, ஜெயந்த் பட்டீலின் கோரிக்கையே எடுபடாது. மத்திய அமைச்சரவையில் இனியும் நீடிப்பது குறித்து இனிமேல் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதனிடையே, அஜித் பவாரின் செயலினைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களை உறுப்பினருமான பிரபுல் படேல் மற்றும் சுனில் தாக்ரே எம் உள்ளிட்ட ஐந்து தலைவர்கள் தேசியவாத கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அஜித் பவார் உள்ளிட்ட ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சரவையில் பதவி ஏற்றுக்கொண்ட 8 பேர் மீதும் தகுதி நீக்க நடவடிக்கையில் கட்சி ஈடுபட்டது.
இதற்கு பதிலடியாக, அஜித் பவார் அணி, என்சிபி மாநிலத் தலைவர் ஜெயந்த் பாடீலை நீக்கி உத்தரவிட்டது. அதேபோல், ஜெயந்த் பாடீல் மற்றும் ஜிதேந்ர அவ்ஹாத் ஆகியோரை அவை உறுப்பினர் பதவியில் இருந்து நீ்க்க பரிந்துரைத்துள்ளது.
கட்சி அலுவலகம் திறந்த அஜித் பவார்: மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்ற பின்னர், அஜித் பவார் தலைமை செயலகம் அருகில் புதிய என்சிபி அலுவலகம் திறக்க உள்ளார். தற்போதைய கட்சி அலுவலகம் மும்பையின் கிழக்கு பல்லார்ட்டில் உள்ளது. அஜித் பவார் அணி தாங்களே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றும், வேறு அந்த அணியும் இல்லை என்றும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, புதன்கிழமை இரண்டு அணிகளும் மும்பையில் தனித்தனியாக கூட்டம் நடத்தவுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிளவுக்கு பின்னர் நடக்கும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு அணிகளும் பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவினை கோரியுள்ளது.
இதனிடையே, "மகாராஷ்டிராவில் தேசியவாத கட்சியின் அஜித் பவாரின் கிளர்ச்சியால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது போன்ற நிலை பிஹாரிலும் நடக்கலாம்" என்று சுஷில் குமார் மோடி கணித்துள்ளார். | வாசிக்க > “பிஹாரில் பிளவின் விளிம்பில் நிதிஷ் கட்சி” - சுஷில் மோடி கருத்தும், ஜேடியு பதிலடியும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT