Published : 04 Jul 2023 05:35 AM
Last Updated : 04 Jul 2023 05:35 AM
புதுடெல்லி: பெங்களூருவில் ஜூலை 13, 14-ம் தேதிகளில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் 17, 18-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதன்படி, எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த 23-ம் தேதி நடந்தது. இதில், நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஜூலை 13, 14-ல் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கூட்டம் நடக்கும் தேதி தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘ஜூலை 17, 18-ம்தேதிகளில் பெங்களூருவில் அடுத்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. ஜனநாயக விரோத சக்திகளை தோற்கடிக்க உறுதி பூண்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியபோது, ‘‘அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வு அமைப்புகளால் மகாராஷ்டிராவில் நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. தேசியவாத காங்கிரஸ் உடைந்திருப்பது உட்கட்சி விவகாரம். இந்த பிளவால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அக்கட்சி தலைவர் சரத் பவார் நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவர். எந்த சூழ்நிலையையும் அவர் கையாள்வார்’’ என்று தெரிவித்தார்.
தேதி தள்ளிவைப்பு ஏன்?: மகாராஷ்டிராவில் அஜித் பவார் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்ததால், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்துள்ளது. இதனால், அக்கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதற்கு இதுவே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
அதேநேரம், ஐக்கிய ஜனதா தள செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறும்போது, ‘‘பிஹாரில் ஜூலை 10 முதல் 14-ம் தேதி வரையும், கர்நாடகாவில் ஜூலை 3 முதல் 14-ம் தேதி வரையும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது. இதை கருத்தில் கொண்டுதான் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதற்கிடையே, மேகேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடக காங்கிரஸ் அரசு உறுதியாக இருக்கும் நிலையில், தமிழக திமுக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில், பெங்களூருவில் நடக்கும் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பாரா என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ்போல, உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளில் இருந்தும் எம்.பி.,எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு அணி மாறக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. இவ்வாறு பிரதான மாநில கட்சிகளில் அடுத்தடுத்து குழப்பம் ஏற்பட்டால் எதிர்க்கட்சிகள் கூட்டணி கேள்விக்குறியாகும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT