Published : 03 Jul 2023 12:42 PM
Last Updated : 03 Jul 2023 12:42 PM
புதுடெல்லி: "முதலில் ஊழல்வாதிகள் என்று தாக்குங்கள் பிறகு அவர்களையே ஆரத்தழுவிக்கொள்ளுங்கள்" - என்று என்சிபி பிளவு குறித்து பாஜகவை விமர்சித்துள்ளார் மாநிலங்களவை உறுப்பினரான கபில் சிபல். மேலும் அமெரிக்க காங்கிரஸில் பேசிய மோடி "ஜனநாயகத்தின் தாய்" என்று இந்தியா பற்றி கூறியதன் அர்த்தம் இதுதானோ என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் பாஜகவை கடுமையாக விமர்ச்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முதலில் ஊழல்வாதிகளைத் தாக்கிப் பேசுங்கள். பின்னர் அவர்களை ஆரத்தழுவிக் கொள்ளுங்கள். முதலில் அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று உத்திரவாதம் கொடுங்கள். பின்னர் அவர்களிடம் ஆதரவுக்கான உத்திரவாதத்தைப் பெறுங்கள். விசாரணை நிறுத்தப்பட்டது. இனி அமலாக்கத்துறை, சிபிஐ பதற்றம் இல்லை. இப்படித்தான் ஜனநாயகத்தின் தாய் வேலை செய்கிறதோ?" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சனிக்கிழமை கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளைக் குறித்தும் பாட்னா கூட்டம் பற்றியும் கூறும் போது," நாட்டின் சாமானிய குடும்பத்தை முன்னேற்ற அவர்களிடம் எந்த உத்திரவாதமும் இல்லை. ஊழல்வாதிகள் அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். ஊழல்குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே மகாராஷ்டிரா அரசியல் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவ சேனா (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ரவுத் கூறுகையில்,"மகாராஷ்டிராவின் முதல்வர் விரைவில் மாற்றப்பட உள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள். அதனால் தான் அஜித் பவார் உள்ளிட்டவர்கள் உள்ளே சேர்க்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 40 எம்எல்ஏக்கள் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனர். மாநிலத்தின் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். இதன்மூலம் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT