Published : 08 Jul 2014 08:45 AM
Last Updated : 08 Jul 2014 08:45 AM
‘ஷரியத் சட்டம், ஃபத்வா போன்றவற்றுக்கு சட்ட அங்கீகாரம் எதுவும் இல்லை. அந்த உத்தரவுகளுக்கு அடிபணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் விஸ்வ லோச்சன் மதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
அகில இந்திய முஸ்லிம் தனியுரிமைச் சட்ட வாரியத்தின் கீழ் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் அறிஞர்கள் சபை இயங்கி வருகிறது. இது, இஸ்லாமிய புனிதச் சட்டத்தை பின்பற்றுவதாக கூறிக் கொண்டு நாடு முழுவதும் போட்டி நீதிமன்றங்களை நடத்தி வருகிறது.
தார்-உல்-காஸா, நிஸாம்-இ-காஸா ஆகிய அமைப்புகளை உருவாக்கி முஸ்லிம்களின் குடும்ப விவகாரங்கள், சொத்து விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இதில் ஃபத்வா எனப்படும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
ஐந்து குழந்தைகளின் தாய் ஒருவர், மாமனாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதை விசாரித்த முஸ்லிம் அமைப்பு, தந்தை உறவு கொண்டதால், அவர் மனைவி என்ற தகுதியை இழந்து விட்டார் என்று கூறி, கணவன், மனைவியை பிரித்து வைத்துள்ளது.
இன்னொரு வழக்கில் 19 வயது பெண் ஒருவரை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், இனிமேல் அப்பெண் மகனுடன் சேர்ந்து வாழக்கூடாது, மாமனாருடன்தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இதுபோன்ற ஃபத்வாக்களுக்கு முஸ்லிம் சட்ட வாரியம் அங்கீகாரம் அளிக்கிறது.
இவர்கள் நீதிமன்றங்களுக்கு போட்டியாக ஒரு அமைப்பை நடத்தி வருகின்றனர். இதை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
சமரச அமைப்பு
மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ஃபத்வாக்கள் ஆலோசனைகள் தானே தவிர, உத்தரவுகள் அல்ல. அவற்றை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை’ என்று தெரிவித்தது.
முஸ்லிம் தனியுரிமைச் சட்ட வாரியம் தனது பதில் மனுவில், ‘இது போட்டி நீதிமன்றங்கள் அல்ல. முஸ்லிம்கள் தொடர்பான விவகாரங்களில் சுமுகமான, சமரசம் செய்யும் அமைப்பாகவே செயல்படுகின்றன’ என்று தெரிவித்தது.
இருதரப்பையும் விசாரித்த நீதிபதிகள் சந்திரமவுலி பிரசாத், பினாகி சந்திர கோஸ் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
தார்-உல்-காஸா என்ற அமைப்பு சட்டப்பூர்வமாக உருவாக் கப்பட்டது அல்ல. அதற்கு சட்ட அங்கீகாரம் எதுவும் இல்லை. காஸி, முப்தி போன்றோர் தங்கள் சொந்த கருத்துகளை ஃபத்வாக்கள் மூலம் யார் மீதும் திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ சட்டத்தில் இடமில்லை. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் என்ன பின்பற்றப்பட்டது என்பது பற்றி கவலையில்லை. சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற உத்தரவுகளுக்கு இடமில்லை.
ஷரியத் சட்டத்தின்படி, பிறப்பிப்பதாக கூறப்படும் ஃபத்வாக்களுக்கு அடிபணிய வேண்டும் என்ற அவசியம் எந்தக் குடிமகனுக்கும் இல்லை. அதற்கு சட்ட அங்கீகாரம் இல்லை. அவற்றை புறந்தள்ளி விடலாம். ஃபத்வாக்களை பின்பற்ற வேண்டும் என்று யாராவது கட்டாயப்படுத்தினால், அது சட்ட விரோதம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT