Published : 01 Jul 2023 03:17 PM
Last Updated : 01 Jul 2023 03:17 PM

26 பேர் பலியான பஸ் விபத்து | “எக்ஸ்பிரஸ் சாலை தரத்தைக் குறைகூறுவது சரியல்ல” - மகாராஷ்டிர அரசு

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் ஆகியோர் பேருந்து விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.

புல்தானா: "மகாராஷ்டிராவில் 26 பேர் உயிரிழந்த பேருந்து விபத்துக்கு சாலையின் கட்டுமானத் தரத்தை குறைகூறுவது சரியில்லை" என்று அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவிந்திர பட்னாவிஸ், "இந்த நேரத்தில் விபத்து நடந்த சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையின் தரம் குறித்துப் பேசுவது முதிச்சியின்மையைக் காட்டுகிறது. விபத்துக்கு சாலையின் கட்டுமானத் தரம் குறித்து பேசுவது சரியில்லை. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 7 பேர் உயிர் பிழைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டியது இருக்கிறது.

விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மனித தவறு அல்லது டயர் வெடித்து விபத்து நடந்திருக்கலாம். இப்போது எதுவும் கூற முடியாது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஸ்மார்ட் சிஸ்டம் பொருத்த திட்டமிட்டுள்ளோம் ஆனால், அதற்கு கால அவகாசம் எடுக்கும்" என்றார்.

விபத்து: மகாராஷ்டிராவின் யவத்மாலில் இருந்து புனே நோக்கிச் சென்ற பேருந்து சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில் புல்தானாவில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவுக்குப் பின் 2 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தீ விபத்தில் சிக்கி மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.

முதல்வர், துணை முதல்வர் நேரில் ஆய்வு: பேருந்து விபத்து நடந்த இடத்துக்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸும் நேரில் சென்று ஆய்வு செய்து மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இந்த விபத்தினை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

பிரதமர் இரங்கல்: விபத்து குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, "மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்து மிகுந்த வருத்தத்தைத் கொடுத்துள்ளது. எனது பிராத்தனைகளும் எண்ணங்களும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருடன் இருக்கின்றன. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம்: புல்தானா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு சார்பில் ரூ.5 லட்சமும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x