Published : 01 Jul 2023 11:13 AM
Last Updated : 01 Jul 2023 11:13 AM
யவத்மால்: முந்தைய நொடிவரை தன்னுடன் பேருந்தில் பயணித்துவந்த சக பயணிகள், கண் முன்னே தீயில் கருகுவதைப் பார்த்து செய்வதறியாது கதறி அழுதததாகக் கூறியுள்ளார் மகாராஷ்டிரா பேருந்து விபத்தில் தப்பிப்பிழைத்த நபர் ஒருவர்.
மகாராஷ்டிராவின் யவத்மாலில் இருந்து புனே நோக்கிச் சென்ற பேருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் விபத்துக்குள்ளானது. சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில் புல்தானாவில் அந்தப் பேருந்து திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். வெகு சிலரே உயிர் பிழைத்தனர்.
அவ்வாறு உயிர் பிழைத்த நபர் ஒருவர் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், "தீ பிடித்தவுடன் நானும் என் அருகில் இருந்தவரும் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியேறினோம். இன்னும் சிலர் அதே ஜன்னல் வழியாக வெளியேறினர். ஆனால் எல்லோராலும் அவ்வாறாக வெளியேற முடியவில்லை.
தீ மளமளவென பற்றி எரிந்தது. அதனால் உள்ளே சிக்கியிருந்தவர்களால் வெளியேற முடியவில்லை. எங்கள் கண் முன்னே சக பயணிகள் தீயில் கருகுவதைக் கண்டு செய்வதறியாது கதறினோம். விபத்து நடந்த தருணத்தில் நிறைய வாகனங்கள் அவ்வழியாகச் சென்றன. ஆனாலும் பல வாகனங்கள் நிற்காமல் கடந்து சென்றன. நிறையபேர் உதவிக்கு வந்திருந்தால் இன்னும் ஒரு சிலரையாவது காப்பாற்றியிருக்கலாம். ஆனால் ஆறுதல் அளிக்கும்விதமாக விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் அந்தப் பகுதிக்கு வந்தனர்" என்றார்.
விபத்து நடந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர்க்காரர் ஒருவர் கூறுகையில், "பிம்பல்குடா செல்லும் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து நேரும். உடனே உள்ளூர்காரர்கள் தான் உதவிக்குச் செல்வோம். இன்றும் அப்படியான அபயக் குரல் கேட்டே வந்தோம். ஆனால் அங்கே நாங்கள் பார்த்த காட்சிகள் கோரமாக இருந்தன" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT