Last Updated : 01 Jul, 2023 05:47 AM

4  

Published : 01 Jul 2023 05:47 AM
Last Updated : 01 Jul 2023 05:47 AM

ரூ.1,000 கோடிக்கு சொத்து குவித்த தாசில்தார் கைது - ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்த லோக் ஆயுக்தா போலீஸார்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட தாசில்தார் அஜித்குமார் ராயின் வீட்டில் அதிகாரிகள் ரொக்கப் பணம், தங்க‌ நகைகளை கைப்பற்றி பட்டியலிடுகின்றனர். உள்படம்: தாசில்தார் அஜித்குமார் ராய்.

பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த தாசில்தார் ஒருவர் ரூ. 1000 கோடி மதிப்பிலான சொத்துகளை குவித்துள்ளார். அவரை லோக் ஆயுக்தா போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள கிருஷ்ணராஜபுரம் தாசில்தார் அஜித்குமார் ராய் (45) அதிகளவில் லஞ்சம் வாங்குவதாகவும், பினாமி பெயரில் சொத்துகள் வாங்கி இருப்பதாகவும் லோக் ஆயுக்தா போலீஸாருக்கு புகார் வந்தது. இதையடுத்து லோக் ஆயுக்தா போலீஸார் கடந்த புதன்கிழமை அஜித்குமார் ராய்க்கு சொந்தமான வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, உறவினரின் வீடுகள், நண்பர்களின் அலுவலகங்கள் உட்பட 12 இடங்களில் சோதனை நடத்தினர்.

அதில் ரூ.40 லட்சம் ரொக்கம், 700 கிராம் தங்க நகைகள், வைர கற்கள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை சிக்கின. இதுதவிர ரூ. 3 கோடி மதிப்பிலான‌ 5 சொகுசு கார்கள், ரூ.5 லட்சம் மதிப்பிலான 2 மோட்டார் சைக்கிள்கள், 65 கைக்கடிகாரங்கள், வெளிநாடுகளை சேர்ந்த 36 மது பாட்டில்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள தொட்டபள்ளாப்புராவில் 99 ஏக்கருக்கு நிலம் வாங்கியதற்கான ஆவணங்களையும் கைப்பற்றினர். பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள தேவனஹள்ளி அருகே 96 ஏக்கர் நிலம், 18 ஏக்க‌ரில் பண்ணை வீடு ஆகியவற்றின் ஆவணங்களும் சிக்கின. இதுதவிர கண்ணூரில் 30 ஏக்கர் நிலம், பெங்களூரு நகரில் 18 வீட்டுமனைகள் வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என லோக் ஆயுக்தா வட்டாரம் தெரிவிக்கிறது.

30 மணி நேரம் விசாரணை: இதையடுத்து லோக் ஆயுக்தா போலீஸார் அஜித்குமார் ராயிடம் சுமார் 30 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தொட்டபள்ளாப்புராவில் வாங்கிய 99 ஏக்கர் நிலத்தில் குதிரை பந்தய பயிற்சி பள்ளி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததும், பினாமி பெயரில் சொத்துகளை குவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

7 நாட்கள் காவல்: இதை தொடர்ந்து போலீஸார் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமார் ராய் இவ்வளவு சொத்துகளை வாங்கியது எப்படி? இதில் வேறு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x