Published : 01 Jul 2023 05:51 AM
Last Updated : 01 Jul 2023 05:51 AM

பேருந்தில் மகளிர் இலவசமாக செல்லும் திட்டத்தால் பெங்களூரு வாடகை வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதால் வாடகை வாகன ஓட்டுநர்களும், தனியார் பேருந்து உரிமையாளர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சியை அமைத்துள்ளது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் கடந்த 13-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனால் அரசு பேருந்துகளை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. சுற்றுலா தலங்களுக்கும், ஆன்மீக தலங்களுக்கும் செல்வோரின் கூட்டமும் வெகுவாக அதிகரித்துள்ளது.

இலவச பயண‌ திட்டத்தால் ஆட்டோ, வாடகை டாக்சி, வேன் ஆகியவற்றில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக சரிவடைந்துள்ளது. அதேபோல பெங்களூருவுக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் தனியார் பேருந்துகளில் பெண்களின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. ஓலா, ஊபர் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி பயணம் செய்வோரும் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பேசும்வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதில் அவர், ‘‘காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை ஆட்டோ ஓட்டி இருக்கிறேன். வெறும் 40 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளது'' என கண்ணீர் மல்க கூறுகிறார். இந்த வீடியோவை ஏராளமானோர் பகிர்ந்து, இலவச பயண திட்டத் தால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக் கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசை விமர்சித்துள்ளனர்.

அதே வேளையில், ஆட்டோ ஓட்டுநர்கள் இரு மடங்கு கட்டணம் கேட்பதாலேயே பயணிகள் அதனை புறக்கணிப்பதாக நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x