Published : 30 Jun 2023 06:10 PM
Last Updated : 30 Jun 2023 06:10 PM

“சாணக்கியா கடை மோமோஸ்...” - டெல்லி பல்கலை. மாணவர்களிடம் பிரதமர் மோடி கலகல பேச்சு

டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி.

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், நம்முடைய வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்கை, நம் மனதிலும், இதயத்திலும் பதித்துக்கொள்வது அவசியம் என்றார். அதேபோன்று தேசத்துக்கான இலக்குக்கு ஏற்ப, நமது மனதையும், இதயத்தையும் தயார்படுத்திக்கொள்வது நம் அனைவரின் பொறுப்பு என்று குறிப்பிட்டார். பின்னர் மாணவர்கள் மத்தியில் நகைச்சுவை ததும்பவும் பிரதமர் பேசினார். தேநீர், மோமோஸ், நூடுல்ஸ் பற்றி பிரதமர் பேசியதால் மாணவர்கள் அதனை ரசனையுடன் கேட்டனர்.

டெல்லி பல்கலைக்கழகம் 1922 மே 1- அன்று நிறுவப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இந்தப் பல்கலைக்கழகம், 86 துறைகள், 90 கல்லூரிகள், 6 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் என தற்போது வியாபித்து வளர்ந்து, தேசத்தைக் கட்டி எழுப்புவதில் தனது உன்னத பங்களிப்பைத் தந்துள்ளது.

இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் பேசிய பிரதமர், "டெல்லி பல்கலைக்கழக வளாகத்தின் தெற்கு, வடக்கு வாயில்கள் அருகில் உள்ள சிற்றுண்டிக் கடைகளில் கிடைக்கும் உணவுகளின் சுவை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் மாற்றிவிடாதீர்கள். வடக்கு வளாகத்துக்கு வெளியே கிடைக்கும் தேநீர், படேல் ஹவுஸ் நூடுஸ்ல், தெற்கு வளாகத்துக்கு வெளியே கிடைக்கும் சாணக்கியா கடையின் மோமோஸ் ஆகியன அதே சுவையோடு இருப்பதை உறுதி செய்யுங்கள்" என்று கூறினார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு வாயில்கள் வெளியே மாணவர்களின் அபிமானம் பெற்ற சிற்றுண்டிக் கடைகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், டெல்லி பல்கலைக்கழகத் துணைவேந்தர் யோகேஷ் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார். அப்போது மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுத்து முறைப்படி செக் இன் செய்து ரயில் பெட்டிக்கு சென்றார். பயணத்தின்போது மற்ற பயணிகளின் பகுதிக்குச் சென்ற அவர் பலரிடமும் உரையாடினார். பிரதமரே தம்மை நோக்கிவந்து ஆர்வமுடன் உரையாடியதால் பயணிகள் பலரும் உற்சாகம் அடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x