Published : 30 Jun 2023 04:20 PM
Last Updated : 30 Jun 2023 04:20 PM

மணிப்பூர் முதல்வரின் ராஜினாமா கடிதத்தைக் கிழித்தெறிந்த பெண்கள் - நடந்தது என்ன?

கிழிக்கப்பட்ட ராஜினாமா கடிதம்

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ள நிலையில், முதல்வர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்யச் சென்ற வழியில் அவரைத் தடுத்து நிறுத்திய பெண்கள் அவருடைய ராஜினாமா கடிதத்தையும் கிழித்தெறிந்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் மைதேயி வகுப்பினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த 2 மாதங்களாக அங்கு இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வன்முறைக்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று (ஜூன் 29) மீண்டும் கலவரம் வெடித்தது. கங்க்போக்பி மாவட்டத்தில் ஹர்தோல் எனும் கிராமத்தில் ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய பைரன் சிங் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மத்திய அரசும் அவர் ராஜினாமா செய்ய அழுத்தம் தருவதாகவும் கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்துவதுபோல் பைரன் சிங் இன்று பிற்பகல் ராஜ்பவன் நோக்கி புறப்பட்டார்.

தலைமைச் செயலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகை செல்லும் வழியில் உள்ள நூபு லால் காம்ப்ளெக்ஸ் பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டனர். அவர்கள் முதல்வரின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். முதல்வர் ராஜினாமா செய்யக் கூடாது என்று வலியுறுத்தினர். அவரது ராஜினாமா கடிதத்தையும் கிழித்தெறிந்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குழுவின் தலைவர் ஷேத்ரிமயும் சாந்தி கூறுகையில், "இது நெருக்கடியான நேரம். இந்தத் தருணத்தில் முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்யக் கூடாது. அரசாங்கம் இப்போது உறுதியாக நின்று கலவரக்காரர்களை ஒடுக்க வேண்டும்" என்றார்.

இந்நிலையில் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "நெருக்கடியான இந்தச் சூழலில் நான் பதவிவிலகப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

— N.Biren Singh (@NBirenSingh) June 30, 2023

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் 53 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வசிக்கின்றனர். நாகா மற்றும் குக்கி பழங்குடியினர் மலையகப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் அங்குள்ள பழங்குடிகளாவர். மைதேயி - குகி சமூகத்தினரிடையேயும் தான் இப்போது கலவரம் நடந்து வருகிறது.| வாசிக்க > மணிப்பூர் மகளிரின் போராட்ட முகம் - பிரிட்டிஷ் காலம் தொட்டு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x