Published : 30 Jun 2023 11:16 AM
Last Updated : 30 Jun 2023 11:16 AM
புதுடெல்லி: வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அந்தக் கூட்டத்தொடரின்போது பொது சிவில் சட்டத்தை தாக்கல் செய்து அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு அனுப்பப்படும் பட்சத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவானது பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் இருந்து கருத்துகளைப் பெறும் என்று தெரிகிறது.
ஆலோசனைக் கூட்டம் எழுப்பும் கேள்விகள்: வரும் ஜூலை 3 ஆம் தேதியன்று சட்ட ஆணையம் மற்றும் சட்ட அமைச்சகப் பிரதிநிதிகளுக்கு சட்டத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அழைப்பு விடுத்திருக்கிறது. பொது சிவில் சட்டத்தில் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து பெறப்பட்ட கருத்துகள் பற்றிய விவாதத்துக்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே, பொது சிவில் சட்டம் குறித்து நாட்டு மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை கடந்த 14-ம் தேதி முதல் தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை லட்சக்கணக்கானோரிடம் இருந்து கருத்துகளை சட்ட ஆணையம் பெற்றுள்ளதாக அதன் தலைவர் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தெரிவித்துள்ளார். ஜூலை 14-ம் தேதி வரை அனைத்து தரப்பினரும், பொது சிவில் சட்டம் குறித்த தங்கள் கருத்துகள், எதிர்ப்புகளை சட்ட ஆணையத்திடம் தெரிவிக்க அவகாசம் தரப்பட்டு உள்ளது.
அதேபோல், மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் பாஜக நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இருவிதமான சட்டங்களால் நாட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்’’ என்று தெரிவித்திருந்தார்.
அடுத்த ஆண்டு மே மாதம் (2024 மே) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் பாஜக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், சட்ட ஆணையத்தின் கருத்து கேட்பு நடவடிக்கை, நாடாளுமன்ற சட்டத்துறை நிலைக்குழு அழைப்புவிடுத்துள்ள ஆலோசனைக் கூட்டம், பிரதமரின் வலியுறுத்தல்கள் எனப் பல நிகழ்வுகளும் மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகரிப்பதாகவே உள்ளன.
கூட்டத்தொடர் எப்போது, எங்கு நடைபெறும்? ஜூலை 3வது வாரத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்றத்தில் நடைபெறுமா இல்லை புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. பழைய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் தொடங்கி பின்னர் சில நாட்களில் புதிய நாடாளுமன்றத்துக்கு கூட்டத்தொடர் மாற்றப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT