Published : 29 Jun 2023 02:07 PM
Last Updated : 29 Jun 2023 02:07 PM

மணிப்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டது ராகுல் காந்தியின் வாகனம் - பாதுகாப்பை காரணம் காட்டி காவல்துறை நடவடிக்கை

மணிப்பூர் வந்தடைந்த ராகுல் காந்தி

இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வருகைதந்த நிலையில் அவரது பாதுகாப்பு வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.

தலைநகர் இம்பாலில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிஷ்ணுபூர் பகுதியில் ராகுலின் பாதுகாப்பு வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. ராகுல் காந்தி சூர்சந்த்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதிதான் மேய்த்தி - குகி இனக் கலவரத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. அது குறித்து பிஷ்ணுபூர் காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், "ராகுலின் வாகனத்தை பாதுகாப்புக் காரணங்களுக்காகவே தடுத்து நிறுத்தியுள்ளோம். அவருடைய பாதுகாப்பு வாகனத்தை கலவரக்காரர்கள் அணிவகுத்து வரும் வாகனம் என்று பாதுகாப்புப் படையினர் தவறாக நினைத்துவிடக்கூடும். இதனால் பிரச்சினைகள் ஏற்படலாம். எங்களுக்கு ராகுல் காந்தியின் பாதுகாப்பு முக்கியம். அதனால் அவரை முன்னேறிச் செல்ல அனுமதிக்க முடியாது" என்றார்.

முன்னதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், ராகுல் காந்தி தனது இரண்டு நாள் (ஜூன் 29, 30) பயணத்தில் பொதுமக்கள் பிரதிநிதிகளை சந்திப்பார். இம்பால் மற்றும் சூர்சந்த்பூரில் உள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிடுவார் என்று குறிப்பிட்டிருந்தார். ராகுல் காந்தி மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது அங்கு பதற்றம் தணிவதற்கு வழிவகுக்கும். அத்துடன் இந்த விவகாரத்தில் மோடி எதிர்வினையாற்றவும் தூண்டுகோலாக இருக்கும் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்தது. இந்நிலையில் ராகுல் காந்தியின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவர் சென்றால் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் காரணம் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நடத்தப்பட்டதை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது. வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டுமே இந்த கூட்டம் நடைபெற்றதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x