Published : 29 Jun 2023 05:16 AM
Last Updated : 29 Jun 2023 05:16 AM
சண்டிகர்: அமெரிக்க இன்ஜினுடன் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேஜஸ் மார்க் 2 ரக போர் விமானம் 2025-ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் எனவும், இதன் 90 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் எனவும் ஏரோனாடிக்கல் மேம்பாட்டு முகமையின் இயக்குநர் பிரபுல்லா சந்திரன் தெரிவித்தார்.
இந்திய விமானப்படைக்கு தேவையான இலகு ரக போர் விமானத்தை(எல்சிஏ) தேஜஸ் என்ற பெயரில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம்(எச்ஏஎல்) தயாரிக்கிறது. ஏற்கெனவே தேஜஸ் மார்க் 1 ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளன.
தற்போது தேஜஸ் மார்க் 2 ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு தயாரிக்கப்படுகின்றன. இதன் வடிவம் தேஜஸ் மார்க் 1 ரகத்தைவிட முற்றிலும் வேறுபட்டது. 20 சதவீதம் பெரியது. இதில் அதி நவீன ஏவியானிக்ஸ் கருவிகள் மற்றும் அதிக ஆயுதங்கள் கொண்டு செல்ல முடியும். இதற்கு தேவையான இன்ஜினை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கும் ஒப்பந்தத்தில் எச்ஏஎல் நிறுவனம் கடந்த 22-ம் தேதி கையெழுத்திட்டது. இதற்கான அறிவிப்பு பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கபயணத்தின்போது வெளியிடப் பட்டது.
இதற்கு முன்பு இந்திய போர் விமானங்களுக்கான இன்ஜின் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது. தற்போது தேஜஸ் 2 ரக போர் விமானத்துக்கு அமெரிக்க இன்ஜின் பொருத்தப்படவுள்ளது. இன்னும் 18 மாதங்களில், தேஜஸ் மார்க் 2 ரக முதல் விமானம் தயாராகிவிடும் எனவும், இது ரஃபேல் போர் விமானத்தை விட சிறந்ததாக இருக்கும் எனவும் பிரபுல்லா சந்திரன் கூறியுள்ளார். இன்ஜின், அவசர காலத்தில் பைலட்டை வெளியேற்றும் சீட், சில சென்சார் கருவிகள் தவிர தேஜஸ் மார்க் 2 ரக விமானத்தின் 90 சதவீத பாங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT