Published : 28 Jun 2023 03:35 PM
Last Updated : 28 Jun 2023 03:35 PM
புதுடெல்லி: "கொள்கையால் வழிநடத்தப்படும் பெரும்பான்மை அரசு, பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது. அது மக்களிடம் பிரிவினையை அதிகப்படுத்தும்" என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையில், ப.சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "பொது சிவில் சட்டத்தை வலியுறுத்திப் பேசும்போது பிரதமர் மோடி நாட்டை ஒரு குடும்பத்துடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். மேலோட்டமாக பார்க்கும்போது இந்த ஒப்பீடு சரியாகவேத் தோன்றும். ஆனால், யதார்த்தம் வித்தியாசமானது.
குடும்பம் என்பது ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு தேசம் அரசியல் ஆவணமான அரசியலமைப்புச் சட்டத்தால் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் வேற்றுமைகள் உண்டு. நமது அரசியலமைப்பு நாட்டு மக்களுக்கிடையே உள்ள வேற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது.
பொது சிவில் சட்டம் என்பது ஓர் ஆசை. கொள்கையால் இயக்கப்படும் ஒரு பெரும்பான்மை அரசு அதனை மக்கள் மீது திணிக்க முடியாது. பொது சிவில் சட்டத்தை ஒரு பயிற்சி என்று பிரதமர் கூறுகிறார். அவர், தற்போது பொது சிவில் சட்டம் என்பது சாத்தியமில்லை என்ற கடைசி சட்ட ஆணையத்தின் அறிக்கையை வாசிக்க வேண்டும்.
பாஜகவின் சொல்லாலும் செயலாலும் நாடு பிளவுபட்டுள்ளது. பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது, அந்தப் பிரிவு மேலும் அதிகாமாகும். நாட்டில் நிலவும் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, வெறுப்புக் குற்றங்கள்,பாகுபாடு காட்டுதல் மற்றும் மாநிலங்களின் அதிகாரங்களை பறித்தல் போன்றவற்றில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே பிரதமர் பொது சிவில் சட்டத்தினை வலியுறுத்தி வருகிறார். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நல்லாட்சி தருவதில் தோல்வியடைந்துவிட்ட பாஜக, வாக்காளர்களை துண்டாடவும், அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவுமே பொது சிவில் சட்டத்தினை தற்போது கையில் எடுத்துள்ளது" என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பேச்சு: முன்னதாக, போபாலில் செவ்வாய்க்கிழமை பேசிய பிரதமர் மோடி,"பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தில் தாத்தா, பாட்டி, கணவன், மனைவி, மகன், மகள் என பல உறுப்பினர்கள் உள்ளனர். அந்தக் குடும்பத்தை சேர்ந்த ஓர் உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றொரு உறுப்பினருக்கு வேறொரு சட்டத்தையும் பின்பற்ற முடியுமா? அவ்வாறு இரு சட்டங்களை பின்பற்றினால் அந்தக் குடும்பத்தை நடத்த முடியுமா? இந்த கருத்தை நமது நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுகிறேன்.
இருவிதமான சட்டங்களால் நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியுமா? நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் என்று அரசமைப்பு சாசனம் கூறுகிறது. இதற்கேற்ப பொது சிவில் சட்டத்தை வரையறுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம்" என்று தெரிவித்திருந்தார். | வாசிக்க > இருவிதமான சட்டங்களால் நாட்டை நடத்த முடியுமா?; பொது சிவில் சட்டம் அவசியம் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
பாஜக வாக்குறுதி: அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது பாஜக நீண்ட காலமாக கூறிவரும் மூன்று முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப் பிரிவு 370 -ஐ நீக்குவது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மற்ற இரண்டு வாக்குறுதிகள்.
பொது சிவில் சட்டம் என்பது, மதத்தின் அடிப்பைடையில் இல்லாமல் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரேமாதிரியான பொதுவான சட்டத்தினை நடைமுறைப்படுத்ததேயாகும். இது திருமணம், விவாகரத்து, பழக்கவழக்கங்கள், தத்தெடுக்கும் உரிமை போன்ற தனிப்பட்ட விஷயங்களையும் கையாளுகிறது. சட்ட ஆணையம் ஜூன் 14-ம் தேதி முதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமான பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகள் உள்ளிட்டோரிடம் கருத்துக் கேட்கும் பணியினைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT