Published : 28 Jun 2023 03:55 AM
Last Updated : 28 Jun 2023 03:55 AM
போபால்: இரண்டு விதமான சட்டங்களால் நாட்டை எப்படி நடத்த முடியும். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக இந்த ஆண்டில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பாஜக சார்பில் ‘எனது பூத், வலிமையான பூத்’என்ற பெயரில் கட்சி தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் இருந்து 3,000 பாஜக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய பிரதேச தலைநகர் போபாலில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகளை சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் காணொலி வாயிலாக அவரது உரையை கேட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: எகிப்து, பாகிஸ்தான், இந்தோனேசியா, கத்தார், ஜோர்டான், சிரியா, வங்கதேசம் ஆகிய முஸ்லிம் நாடுகளில் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் பாஜக ஆட்சிக் காலத்தில் முத்தலாக் விவகாரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாகவே முஸ்லிம் பெண்கள் எங்களோடு இணைந்து உள்ளனர்.
பொது சிவில் சட்டம்: பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தில் தாத்தா, பாட்டி, கணவன், மனைவி, மகன், மகள் என பல உறுப்பினர்கள் உள்ளனர். அந்த குடும்பத்தை சேர்ந்த ஓர் உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றொரு உறுப்பினருக்கு வேறொரு சட்டத்தையும் பின்பற்ற முடியுமா? அவ்வாறு இரு சட்டங்களை பின்பற்றினால் அந்த குடும்பத்தை நடத்த முடியுமா? இந்த கருத்தை நமது நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுகிறேன்.
இருவிதமான சட்டங்களால் நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியுமா? நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் என்று அரசமைப்பு சாசனம் கூறுகிறது. இதற்கேற்ப பொது சிவில் சட்டத்தை வரையறுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம்.
ரூ.20 லட்சம் கோடி ஊழல்: கடந்த 2014, 2019 தேர்தல்களை போன்று வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. இதன்காரணமாக எதிர்க்கட்சிகள் அச்சத்தில் உறைந்துள்ளன.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது 1.86 லட்சம் கோடி அளவுக்கு நிலக்கரி ஊழல், 1.76 லட்சம் கோடி அளவுக்கு 2ஜி அலைக்கற்றை ஊழல், ரூ.70,000 கோடி அளவுக்கு காமன்வெல்த் ஊழல்கள் அரங்கேறின. தமிழகத்தில் திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு ரூ. 1.25 லட்சம் கோடியாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பல மாநிலங்களிலும் நடந்துள்ள அனைத்து ஊழல்களையும் ஒன்றிணைத்தால் ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது.
வாரிசு அரசியலின் தீமைகள் குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் வாரிசுகள் பலன் அடைவார்கள். பிஆர்எஸ் கட்சிக்கு வாக்களித்தால் சந்திரசேகர ராவ் குடும்பத்தினர் வளம் பெறுவார்கள். காங்கிரஸுக்கு வாக்களித்தால் காந்தி (சோனியா காந்தி) குடும்பத்தினர் வளமடைவார்கள். சமாஜ்வாதிக்கு வாக்களித்தால் முலாயம்சிங் குடும்பத்தினர் வளமடைவார்கள். உங்கள் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் நலமாக, வளமாக வாழ விரும்பினால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.
மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திட்டம் மூலம் குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன. இதன்மூலம் மக்களின் பணம் ரூ.20,000 கோடி அளவுக்கு மிச்சமாகி இருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இதுவரை 5 கோடிக்கும் மேற்பட்டோர் பலன் அடைந்துள்ளனர். இந்த வகையில் மக்களின் பணம் ரூ.80,000 கோடி அளவுக்கு சேமிக்கப்பட்டு இருக்கிறது.
பாஜகவை பொருத்தவரை கட்சியைவிட நாட்டின் நலனே உயர்ந்தது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT