Published : 27 Jun 2023 02:54 PM
Last Updated : 27 Jun 2023 02:54 PM

“பாஜகவுக்கு வாக்கு வங்கி அரசியல் தேவையில்லை” - முத்தலாக் முறையை விமர்சித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி

போபால்: அரசியலில் வாக்கு வங்கி பாதையில் செல்வதில்லை என பாஜக முடிவு செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், முத்தலாக் முறை பற்றி கடுமையாக விமர்சித்து, பொது சிவில் சட்டத்தை அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி இன்று மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். 'எனது பூத் எல்லாவற்றையும் விட பலமான பூத்' என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களில் சிறப்பான பங்களிப்பை செலுத்தியவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், "பாஜகவை உலகின் மிகப் பெரியக் கட்சியாக உருவாக்கியதில் மத்தியப் பிரதேசத்துக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. ஒரு கட்சியின் பலம், அக்கட்சியின் தொண்டர்கள்தான். நீங்கள் குளிர்சாதன வசதி கொண்ட அறைகளில் அமர்ந்து கொண்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கவில்லை. கடுமையான தட்ப வெப்ப சவால்களை எதிகொண்டு களத்தில் மக்களை சந்திக்கிறீர்கள். பாஜக யாரையும் சமாதானப்படுத்தி வாக்கு வங்கி அரசியல் செய்யாது என முடிவு செய்துள்ளது. இந்தியா வளர வேண்டும் என்றால் கிராமங்கள் வளர வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறினார்.

எதற்காக இரண்டு சட்டங்கள்? - முத்தலாக் பற்றிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "முத்தலாக் இஸ்லாத்தில் இருந்து பிரிக்க முடியாதது என்றால் எதற்காக எகிப்து, இந்தோனேசியா, கத்தார், ஜோர்டான், சிரியா, வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அது நடைமுறையில் இல்லை. 90 சதவீத சன்னி முஸ்லிம்களைக் கொண்ட எகிப்தில் முத்தலாக் முறை 80 ஆண்டுகளுக்கு முன்னரே ஒழிக்கப்பட்டுவிட்டது.

ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும். அதேபோல் ஒரு தேசம் இரண்டுவிதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது" என்று கூறி பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தினார்.

மேலும், முத்தலாக் முறை பற்றி கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடிம், "முத்தலாக் நடைமுறையை ஆதரிப்பவர்கள் வாக்கு வங்கிப் பசியில் இருக்கிறார்கள். அவர்கள் முஸ்லிம் மகள்களுக்கு பெரிய அநீதி செய்கிறார்கள். முத்தலாக் நடைமுறை ஒரு பெண்ணை மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிக்கிறது. நம்பிக்கையுடன் திருமணத்துக்குள் செல்லும் பெண் மீண்டும் அவள் வீட்டுக்கே அனுப்பப்பட்டால், அவளின் பெற்றோர், சகோதரர்கள் வேதனையடைகின்றனர். அதனால்தான் முத்தலாக் நடைமுறையை ரத்து செய்ததால் நான் எங்கு சென்றாலும் முஸ்லிம் பெண்கள் பாஜகவை ஆதரிக்கின்றனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x