Published : 27 Jun 2023 12:24 PM
Last Updated : 27 Jun 2023 12:24 PM
மண்டி: நிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட மண்டி-குல்லு தேசிய நெடுஞ்சாலை 20 மணி நேரத்திற்குப் பின் நேற்றிரவு(திங்கள்கிழமை) திறக்கப்பட்டது. எனினும், மேலும் பல சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டி–குல்லு இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிமை மாலை முதல் போக்குவரத்து முடங்கியது. இச்சாலையில் சுமார் 200 சுற்றுலாப் பயணிகள் நடுவழியில் சிக்கித் தவித்து வந்தனர். இந்தநிலையில் 20 மணி நேரத்திற்குப் பின் நேற்றிரவு இந்த தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. இருந்தாலும் நிலச்சரிவு காரணமாக 300 க்கும் அதிமான சாலைகள் மூடப்பட்டுள்ளதால் பிரபலமான சுற்றுலாதலங்களுக்குச் சென்ற பயணிகள் பல்வேறு இடங்களில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நிலைமை அப்படியே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவும் சாலைகளின் தற்போதைய நிலையும்:
> ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து சுமார் 20 மணி நேரத்திற்கும் மேல் மூடப்பட்டிருந்த மண்டி - குல்லு தேசிய நெடுஞ்சாலை திங்கள் கிழமை இரவில் திறந்து விடப்பட்டது.
> டாரேட் நாலாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக தண்டி - கில்லார் மாநில நெடுஞ்சாலை 26-ல் செவ்வாய்க்கிழமை காலையில் போக்குவரத்து தடைபட்டது.
> மணாலியில் உள்ள சண்டிகர் - மணாலி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை ஒரு வழி மட்டும் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
> நிலச்சரிவு காரணமாக 6 மைல் தூரத்திற்கு தடைபட்டிருந்த மண்டி - பாண்டோ பாதை திங்கள் கிழமை இரவு திறக்கப்பட்டது.
பாதிப்புகளை எதிர்கொள்ளும் இமாச்சலப் பிரதேசம்: கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பரஷார் ஏரிக்கு அருகில் இருக்கும் மண்டி மாவட்டதின் பாகிபுட் பகுதி வெகுவாக பாதிப்படைந்துள்ளது. மண்டி பகுதியில் உள்ள பாஹி பாலத்திற்கு அருகில் மேக வெடிப்பும் ஏற்பட்டது. அதேபோல் பாண்டோ - மண்டி தேசிய நெடுஞ்சாலையில் சார்மிலி முதல் சாத்மிலி வரையில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
ஆராஞ்சு அலார்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 301 சாலைகள் மூடப்பட்டுள்ளன. திங்கள்கிழமை 180 சாலைகளைத் திறக்க அரசு இலக்கு நிர்ணயித்திருந்து. இன்று 15 சாலைகளைத் திறக்க இலக்கு வைத்துள்ளது. இதனிடையே, சிர்மவுர், சோலன், சிம்லா, குல்லு மற்றும் கங்ரா பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT