Published : 26 Jun 2023 04:08 PM
Last Updated : 26 Jun 2023 04:08 PM

“மணிப்பூரில் குழப்பமான சூழலே நீடிக்கிறது” - முதல்வர் பிரேன் சிங் தகவல்

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா

இம்பால்: மணிப்பூரில் நிலைமை இன்னும் குழப்பமாகவே இருக்கிறது என்றும், வடகிழக்கு மாநிலத்தில் வன்முறையின் தன்மை மாறிவருவது குறித்து உள்துறை அமைச்சர் கவலை தெரிவித்ததாகவும் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிப்பத்தற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடந்ததற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பிரேன் சிங் கூறுகையில், "புறநகர்களில் நடக்கும் துப்பாக்கிச்சூடு முதல் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்து வரும் கலவரங்கள் வரை வன்முறையின் தன்மை மாறி வருவது அமித் ஷாவை கவலை கொள்ளச் செய்திருக்கிறது.

மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன்சிங், மாநில அமைச்சர் சுசிந்ரோ மைத்தி வீடுகள் மீதான தாக்குதல், தொடர்ந்து நடைபெறும் தீவைப்பு மற்றும் பொதுச் சொத்துகளை அழிக்கும் சம்பவங்கள், பாதுகாப்பு படையினரின் நடமாட்டத்துக்கான இடையூறு போன்றவை குறித்து உள்துறை அமைச்சர் கேட்டறிந்தார்.

வன்முறையின் தொடக்கம் அரசியல், உணர்வு நிறைந்ததாகவும் இருந்தது. ஆனால், தற்போது என்ன நடக்கிறது என்று கூற முடியாத அளவுக்கு நிலைமை குழப்பமாக உள்ளது. மாநிலத்தில் அமைதி நிலைநாட்டவும், இயல்பு நிலை திரும்பவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை உள்துறை அமைச்சரிடம் நான் அளித்துள்ளேன்". இவ்வாறு முதல்வர் கூறினார்.

மணிப்பூரில் மாநில போலீஸாரும் மத்திய பாதுகாப்புப் படையினரும் இணைந்து கிளர்ச்சியாளர்கள் உருவாக்கியிருந்த 12 பதுங்கு குழிகளை அழித்ததாக கூறியதைத் தொடந்து வந்துள்ள முதல்வரின் கருத்து மிகவும் கவனம் பெறுகிறது.

முன்னதாக, மணிப்பூர் நிலவரம் குறித்து ஆலேசானை நடத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சனிக்கிழமை மாலை அனைத்துகட்சி கூட்டம் நடந்தது. நான்கு மணிநேரம் வரை நடந்த இந்தக் கூட்டத்தில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும், அனைத்துக் கட்சிக் குழுவை மணிப்பூருக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கையாக எழுப்பின.

இந்தக் கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், சிவசேனா (யுடிபி), திரிணமூல் காங்கிரஸ், மிசோ தேசிய முன்னணி, பிடிஜே, அதிமுக, திமுக, ஆர்ஜேடி, சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன.

மணிப்பூரில் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த மே 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றார். மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டுவதற்காக நான்கு நாட்கள் தங்கியிருந்து குகி மற்றும் மைத்தி இன மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இருந்த போதிலும் அங்கு இன்னும் வன்முறை தொடர்ந்து வருகிறது.

பின்னணி: மணிப்பூரில் மைத்தி சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3-ம் தேதி குகி பழங்குடியினர் அமைதிப் பேரணி நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இணைய சேவைகள் தடைசெய்யப்பட்டன. மாநிலத்தில் முழுமையாக இணைய சேவை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x