Published : 26 Jun 2023 02:51 PM
Last Updated : 26 Jun 2023 02:51 PM

“நீதிமன்றம் தனது கடமையைச் செய்யும்” - மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ் குறித்து பிரிஜ் பூஷன் கருத்து

பிரிஜ் பூஷன் சிங் | கோப்புப்படம்

புதுடெல்லி: "என் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகார் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது; நீதிமன்றம் தனது கடமையைச் செய்யும்" என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரிஜ் பூஷன் அளித்த பேட்டி ஒன்றில், “நான் அதுகுறித்து எந்த கருத்தும் கூறவிரும்பவில்லை. என் மீதான புகார் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் கீழ் உள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், நீதிமன்றம் தனது கடமையைச் செய்யும்" என்று தெரிவித்துள்ளார். மல்யுத்த வீராங்கனைகள் இனி வீதிகளில் போராட்டம் நடத்தப் போவதில்லை என்று கூறியதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷனின் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறது. அறிவித்தபடி ஜூன் 15-ம் தேதி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இனி எங்கள் போராட்டம் நீதிமன்றத்தில் நடக்கும்; சாலையில் அல்ல.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பாக அளித்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றி இருக்கிறது. தேர்தல் அடுத்த மாதம் 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்காக நாங்கள் காத்திருப்போம்" எனத் தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பிரபல மல்யுத்த வீராங்கனைகளான சாக்சி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட 6 பேர் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த தொடர் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக, கடந்த மே 28-ம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தை அவர்கள் முற்றுகையிட முயன்றதை அடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மேலும், ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.

இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரின் அழைப்பை ஏற்று, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கும், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் சந்தித்துப் பேசினர். அப்போது, ஜூன் 15ம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். இதை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x