Published : 26 Jun 2023 10:39 AM
Last Updated : 26 Jun 2023 10:39 AM
புவனேஸ்வர்: ஒடிசாவில் இன்று (ஜூன் 26) அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் நிவாரணத் தொகையும் வழங்க மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து எங்கு, எப்படி நடந்தது? ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள திகபாஹநாடி எனும் இடத்தில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை இந்த விபத்து நடந்தது. குடாரியில் இருந்து புவனேஸ்வர் மாவட்டம் ராயகடா பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், பேராம்பூரில் இருந்து திருமண வீட்டாருடன் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும் திகபாஹநாடி பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் தனியார் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பேராம்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார். அண்மையில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். அந்த சோகத்தில் இருந்து அம்மாநில மக்கள் மீள்வதற்குள் கோரமான சாலை விபத்து 11 உயிர்களைப் பறித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT