Published : 25 Jun 2023 03:51 AM
Last Updated : 25 Jun 2023 03:51 AM
புதுடெல்லி: மணிப்பூரில் 2 மாவட்டங்களில் துப்பாக்கிச் சண்டை தொடரும் சூழலில், பாதுகாப்புப் படையினர் மீது அடையாளம் தெரியாத கும்பல் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிது. இந்நிலையில், மணிப்பூரில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி சமுதாயத்தினர், தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மணிப்பூரில் உள்ள குகி மற்றும் நாகா பழங்குடியினர் கடந்த மே 3-ம் தேதி ஒற்றுமைப் பேரணி நடத்தினர். இந்தப் பேரணி பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது, மணிப்பூரில் வீடுகள், கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டன. தற்போது வரை கலவரம் ஓயவில்லை.
ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியும், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் நீடிக்கிறது.
மணிப்பூரின் இம்பால் கிழக்கு மற்றும் காங்போக்பி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், அடையாளம் தெரியாத கும்பலுக்கும் இடையே கடந்த 3 நாட்களாக துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
இம்பால் கிழக்கு மாவட்டத்தின் உராங்பட் மற்றும் காங்போக்பி மாவட்டத்தின் யயின்காங்போக்பி ஆகிய இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் மீது, அடையாளம் தெரியாத கும்பல் இயந்திரத் துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
மலைப் பகுதியில் இருந்து ஊடுருவிய கும்பல், உராங்பட் மற்றும் க்வால்தாபி கிராமங்களில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல் காரணமாக, அந்த கிராமத்தில் இருந்த மக்கள் வெளியேறிவிட்டனர்.
இதேபோல, காங்போக்பி மாவட்டத்தின் யயின்காங்போக்பி கிராமத்திலும் பாதுகாப்புப் படையினர் மீது ஆயுத கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இரு தரப்பினருக்கும் இடையே ஏறத்தாழ ஒரு மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
இந்தப் பகுதிக்குள் நுழைந்த கூடுதல் பாதுகாப்புப் படையினரை, இந்த கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தினர்.
இதேபோல, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்ட மணிப்பூர் காவல் பயிற்சிக் கல்லூரிக்கு விசாரணைக்காகச் சென்ற சிபிஐ மற்றும் தடயவியல் குழுவினரையும் உள்ளூர் மக்கள் தடுத்து நிறுத்தினர். தாக்குதல் கும்பலுக்கு ஆதரவாகவும், பாதுகாப்புப் படையினருக்கு எதிராகவும் உள்ளூர் மக்கள் செயல்படுகின்றனர்.
சவப்பெட்டி ஊர்வலம்: இதற்கிடையில், சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள லம்கா என்ற இடத்தில், 13 பழங்குடியினர் மாணவர் குழுக்கள் சார்பில் அமைதி சவப்பெட்டி ஊர்வலம் நேற்று நடத்தப்பட்டது.
கடந்த மே 3-ம் தேதி மணிப்பூரில் கலவரம் தொடங்கியது முதல், மருத்துவமனையின் சவக் கிடங்குகளில் வைத்திருக்கும் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியினரின் உடல்களை முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மணிப்பூர் வன்முறையில் இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,000-க்கும் மேற்மட்டோர் காயம் அடைந்துள்ளனர். மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டு 50 நாட்களாகியும், மத்திய அரசால் வன்முறையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், மணிப்பூர் நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக, டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கூட்டினார். இதில், பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மணிப்பூர் மக்களின் கோரிக்கை, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், தற்போது நிலவும் சூழல் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா எடுத்துரைத்தார். வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் வழிகள் குறித்து, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் தங்களது ஆலோசனையை மத்திய அரசிடம் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT