Published : 24 Jun 2023 05:53 AM
Last Updated : 24 Jun 2023 05:53 AM
பாட்னா: பிஹார் மாநிலத் தலைநகர் பாட்னாவிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியாவில் தற்போது நடைபெற்று கொண்டிருப்பது இரு சித்தாந்தத்துக்கு இடையிலான போர்.
ஒரு பக்கம் காங்கிரஸின் ஒற்றுமை சித்தாந்தம். மறுபக்கம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரிவினை சித்தாந்தம். வெறுப்புணர்ச்சியை அன்பால்தான் வெல்ல முடியும், பாஜக வன்முறை, வெறுப்பை பரப்புதல், நாட்டை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் அமைதி, ஒற்றுமைக்காக வேலை செய்து வருகிறோம். இங்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் வந்துள்ளனர். நாம் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிப்போம். பாஜகவை வீழ்த்த நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளோம்.
கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதுபோல் தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் நடைபெறவுள்ள தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம். கர்நாடகாவில் காங்கிரஸ் உறுதியாக நின்று பாஜகவை வீழ்த்தியது.
பாஜக எங்கெல்லாம் ஆட்சி செய்கிறதோ, அந்த இடத்தில் எல்லாம் மாற்றத்தை நீங்கள் பார்ப்பீர்கள். ஏனென்றால் நாங்கள் ஏழை மக்கள் பக்கம் நிற்கிறோம். அவர்களை நேரில் சந்திக்கிறோம். அவர்களைக் கட்டித் தழுவுகிறோம். அவர்களுடன் இணைந்து வேலை செய்கிறோம்.
பாரத ஒற்றுமை யாத்திரை நடத்திய போது பிஹார் மாநில மக்கள் நம்முடன் இருந்தனர். யாத்திரையின் வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. யாத்திரையில் என்னுடன் இணைந்து வரும் தொண்டர்களைப் பார்க்கும்போது நீங்கள் எந்த மாநிலத்தில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்பேன். அப்போது பலர் தாங்கள் பிஹாரில் இருந்து வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT