Published : 24 Jun 2023 05:47 AM
Last Updated : 24 Jun 2023 05:47 AM
பெங்களூரு/புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஜி20 மற்றும் நான்காவது கல்வி செயற்குழு கூட்டத்தின் சார்பில் கடந்த 17-ம் தேதியில் இருந்து 22-ம் தேதி வரை கல்வி கண்காட்சி நடைபெற்றது.
இதில் நாடு முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர். பெங்களூருவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் (வடக்கு) 7-ம் வகுப்பு படிக்கும் ஷ்யாம் அஹமது (13), 10-ம் வகுப்பு படிக்கும் விவேகானந்த் சாமிநாதன் (15) மற்றும் ஆசிரியர் ரேணுகா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் ஷ்யாம் அஹமது தான் உருவாக்கிய ‘பசி உதவி மையம்' என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தினார். அப்போது ஷ்யாம் அஹமது, “இந்த செயலியை செல்போனில் தரவிறக்கம் செய்துகொண்டு தங்களது விபரங்களை பதிவு செய்ய வேண்டும். தங்களின் வீடு, உணவகம், திருமண மண்டபம் ஆகியவற்றில் உணவு மீதமானால் அதனை பதிவிடலாம். இதனை மற்ற பயனாளர்கள் பெற்று, அருகில் பசியில் வாடும் மக்களுக்கு வழங்கலாம். இதன் மூலம் உணவு வீணாவதை தடுப்பதோடு, மக்களின் பசியையும் போக்கலாம்'' என்றார்.
மாணவர் விவேகானந்த் சாமி நாதன் தான் உருவாக்கிய ‘வாழ்க்கை: விவசாயிகளை மேம்படுத்துதல்’ என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இதன் மூலம் விதைப்பது, பயிரை வளர்த்தெடுத்தல், அறுவடை செய்தல், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி வரை விவசாயிகளுக்குவழி காட்டலாம். குறிப்பாக விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள், பயிர்களை தாக்கும் நோய்கள், பூச்சிகள் ஆகியவற்றை துல்லியமாக கண்டறியலாம்'' என்றார்.
இந்த இரு செயலிகளையும் ஏராளமான கல்வியாளர்களும், விஞ்ஞானிகளும் வெகுவாக பாராட்டினர். மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஜே.பி.பாண்டே, “இந்த மாணவர்களின் சமூக அக்கறை மிகுந்த படைப்புகள் பிரமிக்க வைக்கின்றன. இதுபோன்ற புதுமையான கண்டுபிடிப்புகளை அரசு நிச்சயம் ஊக்குவிக்கும்” என்றார். இதேபோல சில தனியார் நிறுவனங்களும் இரு மாணவர்களையும் தங்களது நிறுவனத்தில் இணைத்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT