Published : 24 Jun 2023 04:13 AM
Last Updated : 24 Jun 2023 04:13 AM
பாட்னா: நிதிஷ்குமார், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உட்பட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தல்களை சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக, இக்கூட்டத்தை நடத்திய பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே என 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடந்தது.
ஆம் ஆத்மியால் பிரச்சினை: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் கூட்டமாக இது கருதப்பட்ட நிலையில், டெல்லி நிர்வாக சேவைகள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட அவசர சட்ட விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் இக்கூட்டத்தில் திடீரென கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே ஒருமித்த கருத்து நிலவுவதால்தான் அவசர சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்று ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறுவது அவதூறான கருத்து’’ என்று குற்றம்சாட்டினார். இதனால் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் கூட்டத்திலேயே காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே மோதல் ஏற்பட்டது. இக்கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் தலைவர்கள் கூறியதாவது:
பிஹார் முதல்வர் நிதிஷ்குமார்: தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போட்டியிட எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரில் அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் இதுதொடர்பான விவரங்கள் இறுதி செய்யப்படும். அப்போது தொகுதி பங்கீடு தொடர்பான விஷயங்களும் இறுதி செய்யப்படும்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: மக்களவை தேர்தலில் நாம் இணைந்து போராட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கான வியூகங்கள் குறித்து ஜூலை 10 அல்லது 12-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி: இது கொள்கைகளுக்கான போராட்டம். எங்கள் இடையே சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், எங்கள் கொள்கையை காக்க நாங்கள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: பாட்னாவில் தொடங்கியுள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இது அவசரநிலை சமயத்தில் பிஹாரில் இருந்து தோன்றிய ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில் ஏற்பட்ட ஜே.பி. இயக்கம் போன்றது. வரலாறு மாற வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஆனால், பிஹாரில் ஏற்பட்டுள்ள தொடக்கத்தால் வரலாறு பாதுகாக்கப்படும். நாம் நமது மக்களை காப்பாற்ற வேண்டும். தேவைப்பட்டால், நாம் ரத்தம் சிந்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT