Published : 23 Jun 2023 03:53 PM
Last Updated : 23 Jun 2023 03:53 PM
பாட்னா: பிஹாரில் நடந்து வரும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் குறித்து அம்மாநில பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத், 'இந்த திருமண ஊர்வலத்தின் மாப்பிளை யார்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேராத தலைவர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்காக, பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பிஹார் தலைநகர் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்தக்கூட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், பிஹார் மாநில பாஜகவைச் சேர்ந்த ரவி சங்கர் பிரசாத், "நிதிஷ் குமார், பாட்னாவில் வரும் 2024-ம் ஆண்டு தேர்தலுக்காக திருமண ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இந்த ஊர்வலத்தின் மாப்பிள்ளை (பிரதமர் வேட்பாளர்) யார்?. அங்கிருப்பவர்கள் அனைவரும் தங்களை பிரதமர் வேட்பாளராகவே கருதுகின்றனர்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக பிஹார் மாநில முன்னாள் துணை முதல்வர் சுசில் குமார் மோடி எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் குறித்து கூறுகையில்," இது அனைவரும் மாப்பிள்ளையாக இருக்கும் ஊர்வலம், ஆனால் விருந்தினர்கள் இல்லாத ஊர்வலம். அதில் உள்ள அனைவரும் தங்களை போட்டியாளர்களாகப் பார்க்கிறார்கள். இப்படி ஒரு ஊர்வலத்துக்கு நிதிஷ் குமார் ஏற்பாடு செய்திருக்கிறார். அங்கிருக்கும் அனைவரும் தங்களின் கருத்தை மற்றவர்கள் ஏற்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
பாஜக தேசிய தலைவர் விமர்சனம்: கலஹண்டியில் உள்ள பவானிபட்னாவில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா கூறுகையில்," இன்று அரசியலில் விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. அன்று அவசரநிலை பிரகடனத்தின் போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், இன்று அவரது பேரன் ராகுல் காந்தியை வரவேற்று கைகோர்த்திருக்கின்றனர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உத்தவ் தாக்கரே பாட்னா சென்றதை நான் பார்த்தேன். அவரது தந்தை ஹிந்து ஹிர்டே சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து எதிர்த்து வந்தார். ஒருமுறை அவர்,'காங்கிரஸுடன் இணையும் நிலைவந்தால் நான் கடையை (சிவசேனாவைக் குறிப்பிட்டு) மூடிவிடுவேன் என்று கூறினார். இன்று அவரது மகன் கடையை அடைத்துவிட்டார்". இவ்வாறு நட்டா பேசினார்.
இந்தியாவில் அவசர நிலை அமலில் இருந்தபோது லாலுபிரசாத் யாதவ் 22 மாதங்களும், நிதிஷ் குமார் 20 மாதங்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT