Published : 23 Jun 2023 03:41 PM
Last Updated : 23 Jun 2023 03:41 PM
பெங்களூரு: இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சரியான இடம் கர்நாடகா என்றும் எனவே, தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வருமாறும் எலான் மஸ்குக்கு கர்நாடகா அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த எலான் மஸ்க்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வின் தலைவர் எலான் மஸ்க் சந்தித்துப் பேசினார். இதையடுத்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த எலான் மஸ்க், "பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவைப் பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டுகிறார். இந்தியாவில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்ய அவர் தூண்டுகிறார். கூடிய விரைவில் நாங்கள் இந்தியாவில் அதிக முதலீடுகளைச் செய்வோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், தான் மோடியின் ரசிகர் என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு இந்தியா வர தான் விரும்புவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்தார். பிரதமர் மோடி உடனான உரையாடல் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள டெஸ்லா நிறுவனம், இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தனது குழுவை கடந்த மாதம் இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. கார் உற்பத்தி மற்றும் பேட்டரி உற்பத்தி மையங்களை இந்தியாவில் நிறுவுவதற்கான வாய்ப்புகள் குறித்து அப்போது அக்குழு ஆய்வு செய்தது. இதையடுத்து, "புதிய தொழிற்சாலையை நிறுவுவதற்கான இடத்தை டெஸ்லா தேர்ந்தெடுக்க உள்ளது. புதிய தொழிற்சாலையை நிறுவுவதற்கு இந்தியா ஓர் அருமையான இடம்" என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
எலான் மஸ்குக்கு கர்நாடகா அழைப்பு: இந்நிலையில், முதலீடு செய்வதற்கு கர்நாடகாவை தேர்ந்தெடுக்குமாறு அம்மாநில அரசு எலான் மஸ்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக கர்நாடகாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டில், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் எலான் மஸ்குக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: "இந்தியாவில் டெஸ்லா தனது விரிவாக்கத்தை மேற்கொள்ள கர்நாடகா மிகச்சிறந்த இடம்.
ஏனெனில் கர்நாடகா ஒரு முற்போக்கான மாநிலம். புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் செழிப்பான மையம். டெஸ்லா நிறுவனத்திற்கும் எலான் மஸ்க்கின் பிற நிறுவனங்களான ஸ்டார்லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் தேவையான வசதிகளை வழங்கவும், ஆதரவை அளிக்கவும் கர்நாடகா தயாராக இருக்கிறது. மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த அடுத்த 20 ஆண்டுகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையில் கவனம் செலுத்த கர்நாடகா முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் தனது நிறுவனத்தை அமைக்க டெஸ்லா விரும்பினால், கர்நாடகா மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில், கர்நாடகா மிகப்பெரும் ஆற்றலையும், திறனையும் கொண்டுள்ளது. கர்நாடகாவில் முதலீடு செய்ய முன்வருமாறு வார்த்தைகள் மூலமும் உளப்பூர்வமாகவும் அழைப்பு விடுக்கிறோம்." இவ்வாறு கர்நாடகாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT