Published : 23 Jun 2023 12:33 PM
Last Updated : 23 Jun 2023 12:33 PM
பாட்னா: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேராத தலைவர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்காக, பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் திட்டமிட்டபடி, பிஹார் தலைநகர் பாட்னாவில் வெள்ளிக்கிழமை கூடியுள்ளனர்.
இந்தக் கூட்டம் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் வீட்டில் காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி ஆகியோர் வியாழக்கிழமை பாட்னா சென்றடைந்தனர்.
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ஆகியோர் இன்று பாட்னா வந்தனர்.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்தவரும், மாநில அமைச்சருமான விஜயகுமார் சவுத்ரி இந்தக் கூட்டம் பற்றிக் கூறுகையில்,"இந்தக் கூட்டம் வரலாற்றில் இடம்பெறப் போகிறது. பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் கூடியிருப்பது, பாஜகவுக்கு எதிரான சக்திகளுக்கு இடையே உருவாகி இருக்கும் ஒற்றுமையை எதிரொலிக்கிறது. வரும் பொதுத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்து, மோடியை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதில் இந்த எதிர்க்கட்சிகளின் முன்னணி முக்கிய பங்காற்றும். கூட்டம் உணவு இடைவேளைக்கு முன், பின் என இரண்டு அமர்வுகளாக நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு பிரச்சினைகளும், இந்த முன்னணி ஏன் அவசியம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பாஜகவுக்கு எதிரான முன்னணியை உருவாக்குவதன் முக்கியத்துவம் மற்றும் 15-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு தேர்தலில் இடம் ஒதுக்கீடு செய்வது குறித்தும் விவாதிக்கப்படும் என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். சில மாநிலங்களில் காங்கிரஸூன் இட ஒதுக்கீடு தொடர்பாக பிராந்திய கட்சிகளுக்கும் பிணக்கு நிலவுகிறது.
இதுகுறித்து ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி கூறுகையில்,"கடந்த 9 மாதங்களாக பிஹாரில் மகாகத்பந்தன் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது தேசிய முன்னணி பின்பற்றுவதற்கான தயாராக உள்ள ஒரு முன்மாதிரி. பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக ஒற்றை எதிர்க்கட்சி வேட்பாளரை நிறுத்தும் ஒருவருக்கு எதிராக ஒருவர் என்ற ஃபார்முலாவை நாங்கள் முன்வைத்துள்ளோம். நிதிஷ் குமார் கூறியிருக்கும் இந்த ஃபார்முலா சிறந்த பலனைத் தரக்கூடியது.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
18 கட்சிகள் ஒரு மேடையில் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் கூடுவது சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய நிகழ்வு ஆகும். மேலும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு 9 மாதங்களுக்கு முன்பு இந்தக் கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக “மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் பிஹாரில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நல்ல தொடக்கமாக இருக்கும் என திரிணமூல் காங்கிரஸ் கருதுகிறது. ஜனநாயக விரோதமான மற்றும் எதேச்சதிகார கொள்கைகளைக் கொண்ட பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது மிகவும் அவசியம் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.
பாஜக விமர்சனம்: "எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம், வீண் முயற்சி என்றும், இந்த சந்தர்ப்பவாத கூட்டணி எந்தவிதமான பலனையும் தராது என்று பாஜக கூறியுள்ளது. இதுகுறித்து, "வீணான முயற்சி இது. கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு இதேபோன்ற முயற்சிகளை நாம் பார்த்தோம். அதன் முடிவுகள் நம் முன்னால் இருக்கின்றது. இந்த நாட்டு மக்கள் பாஜகவையும், பிரதமர் மோடியையும் நம்புகிறார்கள். அவர்கள் நிலையில்லாத, சந்தர்ப்பவாத கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்" என்று மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தெரிவித்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் படனாயக்கும், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவும், பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதியும் கலந்து கொள்ளவில்லை. முன்னவர்கள் இருவரும் கூட்டத்திற்கு வராதிருக்கும் நிலையில் மாயாதி அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT