Published : 23 Jun 2023 06:10 AM
Last Updated : 23 Jun 2023 06:10 AM
கொல்கத்தா: மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் பிஹாரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இது நல்ல தொடக்கமாக இருக்கும் என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜியை கொல்கத்தாவில் கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்துப் பேசினார். அப்போது, வரும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும் ஜெயப்பிரகாஷ் நாராயணனை நினைவுகூர்ந்த மம்தா, எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தை பாட்னாவில் நடத்தலாம் என ஆலோசனை கூறினார். இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெறுகிறது.
பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இக்கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் பிஹாரில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நல்ல தொடக்கமாக இருக்கும் என திரிணமூல் காங்கிரஸ் கருதுகிறது. ஜனநாயக விரோதமான மற்றும் ஏதேச்சதிகார கொள்கைகளைக் கொண்ட பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது மிகவும் அவசியம்.
நம் நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்க பாடுபடும் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு விவகாரங்களில் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன. எனவே, மத்தியில் தவறான ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கு எதிராக நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை என்றால் அது நாட்டு நலனுக்கு எதிரானதாக அமைந்துவிடும்” என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT