Published : 22 Jun 2023 03:28 PM
Last Updated : 22 Jun 2023 03:28 PM

‘பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒரு சிறந்த தொடக்கம்’ - திரிணமூல் காங்கிரஸ்

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி | கோப்புப்படம்

கொல்கத்தா : பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டம், 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான நல்ல தொடக்கமாக திரிணமூல் காங்கிரஸ் கருதுகிறது. மேலும் ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார கொள்கைகளுக்கு எதிரான, பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை (ஜூன் 23) அம்மாநில தலைநகர் பாட்னாவில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், சரத் பவார், மெகபூபா முஃப்தி, ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அக்கட்சியின் தேசிய செயலாளர் மற்றும் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியுடன் கலந்து கொள்கிறார்.

இதனிடையே இந்தக் கூட்டம் பற்றி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரக் ஓ பிரைன் கூறுகையில்," பாட்னா சென்றடைவதற்கு முன்பே இது ஒரு நல்ல தொடக்கம்.... நாட்டின் அரசியலமைப்பைக் காப்பாற்ற விரும்பும் அனைத்துக் கட்சிகளும் பலவிஷயங்களில் ஒரே பக்கத்தில் இருந்து வேலை செய்கின்றன. தற்போது எங்களிடம் அனைத்து கட்சித் தலைவர்களும் கூடுவதற்கு ஒரு தேதி, ஒரு இடம், ஒரு கொள்கை இருக்கின்றது.

அதேநேரத்தில், அடுத்த கூட்டத்துக்கான தேதி மற்றும் இடம் குறித்து பாட்னாவில் முடிவு செய்யப்படும். இதைத் தாண்டி கூட்டம் குறித்து கேள்வி எழுப்புவதும், ஊகிப்பது அவசியமில்லாதது" என்றார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுகேந்து சேகர் ராய் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறுகையில்,"2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கும் குறைவான அவகாசமே உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உறுதி செய்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.

நாட்டின் ஜனநாயகத்தை அழித்துவிட்ட பாஜக அரசியல் அமைப்பை சிதைக்க முயல்கிறது. பாஜகவுக்கு எதிராக போராடும் கட்சிகளுக்கு ஒற்றுமை ஏற்படாவிட்டால் அது நாட்டின் துரதிர்ஷ்டம். எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமையைக் கட்டமைக்கும் முயற்சி கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் போதே தொடங்கி விட்டது" என்றார்.

எதிர்க்கட்சித் தலைமை பற்றிய பிரச்சினை இந்த முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ராய்,"ஊடகங்களும் பாஜகவும் மட்டுமே அதைப் பற்றிக் கவலைப் படுகின்றன. எதிர்க்கட்சிகளுக்கோ நாட்டு மக்களுக்கோ அதைப்பற்றிக் கவலையில்லை" என்றார்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சித்தலைவர் நிதிஷ் குமார் கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் இணைந்து பிஹாரில் ஆட்சி அமைத்ததில் இருந்து பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தார்.

இதற்காக ஏப்ரல் மாதம் அவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது, ஜெயப்பிரகாஷ் நாராயணன் குறித்த நினைவினைப் பகிர்ந்து கொண்ட மம்தா பானர்ஜி, பாட்னாவில் எதிர்க்கட்சித்தலைவர்களின் கூட்டத்தினை நடத்தும் யோசனையை முன்மொழிந்தார்.

அதேபோல, காங்கிரஸ் மற்றும் பாஜகவிடமிருந்து விலகி இருக்கப் போவதாக முதலில் அறிவித்திருந்த மம்தா பானர்ஜி, மே மாதம் நடந்த கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தனிப்பெருபான்மை வெற்றியைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் தனது கட்சியுடன் காங்கிரஸ் போட்டியிடாத பட்சத்தில் 2024 தேர்தலில் காங்கிரஸூக்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க தயார் என்று தெரிவித்திருந்தார். மேலும் காங்கிரஸ் வலுவாக உள்ள இடத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டும் என்றும் மற்ற இடங்களில் பிராந்திய கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

சந்தர்ப்பவாத கூட்டணி: நாளை நடைபெற இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம், வீண் முயற்சி என்றும், இந்த சந்தர்ப்பவாத கூட்டணி எந்தவிதமான பலனையும் தராது என்று பாஜக கூறியுள்ளது. இதுகுறித்து, "வீணான முயற்சி இது. கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு இதேபோன்ற முயற்சிகளை நாம் பார்த்தோம். அதன்முடிவுகள் நம்முன்னால் இருக்கின்றது. இந்த நாட்டு மக்கள் பாஜகவையும், பிரதமர் மோடியையும் நம்புகிறார்கள். அவர்கள் நிலையில்லாத, சந்தர்ப்பவாத கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்" என்று மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x