Published : 22 Jun 2023 01:43 PM
Last Updated : 22 Jun 2023 01:43 PM
பாட்னா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு சவால்விடக்கூடிய அளவிலான தலைவர் எதிர்க்கட்சிகளிடம் இல்லை என்று பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி தெரிவித்துள்ளார்.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வந்த ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி, இரு தினங்களுக்கு முன்பு அதில் இருந்து வெளியேறியது. இதையடுத்து ஜிதன் ராம் மஞ்சியும் அவரது மகனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான சந்தோஷ் சுமனும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜிதன் ராம் மஞ்சி, இன்று முதல் எங்கள் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. இது குறித்துதான் அமித் ஷாவிடம் பேசினோம் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜிதன் ராம் மஞ்சி, "எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயலலாம். ஆனால், அவர்களுக்கு என்று ஒரு முகம் இருக்கும் (பிரதமர் வேட்பாளர்) என்று தோன்றவில்லை. பிரதமர் மோடிக்கு சவால் விடக்கூடிய தலைவர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இல்லை. தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று பாஜக வற்புறுத்தவில்லை.
ஆனால், அவர்கள் எங்களை கூட்டணியில் இணைத்துக்கொண்டார்கள். ஐக்கிய ஜனதா தளத்துடன் எங்கள் கட்சியை இணைத்துவிட வேண்டும் என்று நிதிஷ் குமார் தொடர்ந்து வலியுறுத்தினார். அவர் அவ்வாறு வலியுறுத்தாமல் இருந்திருந்தால் நாங்கள் மகாகட்பந்தன் கூட்டணியில் இருந்திருப்போம்" என தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நாளை நடைபெற இருக்கிறது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அழைப்பின் பேரில் இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகள் பெருமளவில் கலந்து கொள்ள இருக்கின்றன. இந்நிலையில், அந்த கூட்டணியில் இருந்த ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, அதில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் சேர்ந்திருப்பது பாஜகவின் முக்கிய வியூக அரசியலாகப் பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT