Published : 22 Jun 2023 01:05 PM
Last Updated : 22 Jun 2023 01:05 PM

மணிப்பூர் வன்முறை குறித்த அனைத்து கட்சிக் கூட்டம் மிகவும் தாமதமான நடவடிக்கை: காங்கிரஸ் விமர்சனம் 

மணிப்பூர் வன்முறை | கோப்புப்படம்

புதுடெல்லி: மணிப்பூர் வன்முறையில் மத்திய அரசின் அனைத்து கட்சிக் கூட்டம் மிகவும் தாமதமான நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. முன்னதாக மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க ஜூன் 24ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"மணிப்பூரில் மரணங்கள் மற்றும் பேரழிவு ஏற்பட்டு 50 நாட்கள் கடந்த பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது மிகவும் தாமதமான ஒன்று. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மணிப்பூர் மக்களிடம் பேசிய பின்னர் தான் மத்திய அரசு விழித்திருக்கிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளாதது, அவரின் கோழைத்தனத்தையும், அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள விரும்பாததையும் உணர்த்துகிறது. இவ்வளவுக்கும் பல்வேறு பிரதிநிதிகள் பிரதமருடன் பேச நேரம் கேட்டும் அவர் அதற்கு நேரம் ஒதுக்கவில்லை.

இதற்கு முன் உள்துறை அமைச்சரே நேராக சென்று அங்குள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அமைதி ஏற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் நிலைமை அதற்குப் பின்னர் மிகவும் மோசமடைந்தது. அவரது தலைமையில் எப்படி நாம் அமைதியை எதிர்பார்க்க முடியுமா?.

மேலும் மாநிலத்தில் பாகுபாடான அரசு தொடர்வதும், இன்னும் குடியரசுத் தலைவர் ஆட்சி இன்னும் அமல்படுத்தப்படாமல் இருப்பதும் கேலிக்கூத்தாக உள்ளது. மணிப்பூரில் அமைதி திரும்புவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கு மோதலில் ஈடுபடும் இரண்டு இனக்குழுக்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசியல் தீர்வு காணவேண்டும். இவைகளை டெல்லியில் இருந்து கொண்டு செய்வது முக்கியத்துவம் இருக்காது. மணிப்பூர் விஷயத்தில் மத்திய அரசின் தீவிரமான தலையீட்டை ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்க்கிறது. இவ்வாறு வேணுகோபால் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வரும் 24-ம் தேதி எகிப்து நாட்டுக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரை சாடிய திக்விஜய் சிங்: கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமரின் உலக தரிசனம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பிரதமரின் அமெரிக்க பயணம் குறித்தும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பக்கத்தில், மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. நமது பிரதமர் ஐநாவில் யோகாசனம் செய்து கொண்டிருக்கிறார். சஜித் மிர்-ஐ சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதை சீனா தடுக்கிறது, மோடி ஐநாவில் யோகாசனம் செய்து கொண்டிருக்கிறார். இது ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்ததை உங்களுக்கு நினைவு படுத்தவில்லையா? மோடியின் ஆட்சி நீரோ மன்னனின் ஆட்சியைப் போல் இல்லையா என்று கேட்டுள்ளார்.

மேலும் அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா ஷ்ரினட்டின் ட்வீட் ஒன்றை டேக் செய்து,"மோடி சிறந்ததொரு நிர்வாகி என்று அவருடைய அரசியல் வழிகாட்டி அத்வானி கூறியிருந்தார். கடந்த 9 ஆண்டுகளாக பிரதமராக அவரது செயல்பாடு, தன்னை விளம்பரப்படுத்தும் ஒன்றைத் தவிர அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. நல்லது சுப்ரியா நீங்கள் அவரை சரியாக மதிப்பிட்டுளீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x