Published : 22 Jun 2023 12:21 PM
Last Updated : 22 Jun 2023 12:21 PM
புதுடெல்லி: இந்திய உணவுக் கழகத்தில் இருந்து அரிசி வழங்குவதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கேட்டுக் கொண்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு நபர் ஒருவருக்கு மாதம் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, அன்ன பாக்யா என்ற அந்தத் திட்டம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை அடுத்து, வெளிச் சந்தையில் அரசி வழங்குவதை நிறுத்துவதாக இந்திய உணவுக் கழகம் அறிவித்தது. இந்திய உணவுக் கழகத்தின் இந்த அறிவிப்புக்கு சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது பழிவாங்கும் நடவடிக்கை என அவர் விமர்சித்தார். இந்திய உணவுக் கழகத்தின் இந்த முடிவால், அன்ன பாக்யா திட்டம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் சித்தராமையா கூறினார்.
அமித் ஷா உடன் சந்திப்பு: இந்நிலையில், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த சித்தராமையா, அவரிடம் மத்திய அரசின் ஒத்துழைப்பை கோரினார். சந்திப்புக்குப் பின்னர் புதுடெல்லியில் உள்ள கர்நாடக பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, "அன்ன பாக்யா திட்டம் குறித்து அமைச்சர் அமித் ஷாவிடம் விரிவாகப் பேசினேன். அந்த திட்டத்தை செயல்படுத்த இந்திய உணவுக் கழகம் ஒத்துழைப்பு அளிப்பதாக முதலில் தெரிவித்து பின்னர், வெளிச்சந்தையில் அரிசி வழங்கப்பட மாட்டாது என அறிவித்ததை அமித் ஷாவிடம் கூறினேன். ஏழைகளுக்கு அரிசி வழங்கும் இந்த திட்டத்தில் அரசியல் செய்யக்கூடாது என்றும், வெறுப்பு அரசியல் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தேன்.
அன்ன பாக்யா திட்டத்தை செயல்படுத்த இந்திய உணவுக் கழகத்தில் இருந்து அரிசி வழங்க சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு அமித் ஷாவிடம் கேட்டுக்கொண்டேன். எனது கோரிக்கையை அமித் ஷா ஏற்றுக்கொண்டார். மத்திய உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் இன்று(வியாழக்கிழமை) பேசுவதாக உறுதி அளித்துள்ளார். இந்திய ரிசர்வ் காவல்துறையின் (ஐஆர்பி) இரண்டு பட்டாலியன்கள் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டு பட்டாலியன்களை வழங்குமாறு உள்துறை அமைச்சரிடம் கோரினேன். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. நான் முதல்வரான பிறகு தற்போதுதான் முதல்முறையாக அவரை சந்தித்துப் பேசினேன்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT