Published : 22 Jun 2023 11:43 AM
Last Updated : 22 Jun 2023 11:43 AM
புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்து சுமார் 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் வரும் ஜூன் 24-ம் தேதி (சனிக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
முன்னதாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த மே 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றார். மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டுவதற்காக நான்கு நாட்கள் தங்கியிருந்து குகி மற்றும் மைத்தி இன மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, “பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் பேச்சு நடத்தினேன். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவதில் தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தினர். மகளிர் அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்தேன். மணிப்பூர் சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினேன். மாநிலத்தில் அமைதி மற்றும் செழிப்பை உறுதிப்படுத்த நாங்கள் ஒன்றாக உறுதிபூண்டுள்ளோம். இங்கு விரைவில் அமைதி திரும்பும்” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், மணிப்பூர் வன்முறைக்கான காரணங்கள், வன்முறை தொடர்பான நிகழ்வுகள், அதில் அரசு அலுவலர்கள் யாராவது தவறு செய்திருக்கிறார்களா என்பது குறித்து ஆராய்வதற்காக கவுகாத்தி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லாம்பா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை உள்துறை அமைச்சகம் அமைத்தது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்ஷூ சேகர் தாஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோக் பிரபாகர் அடங்கிய இந்தக் குழு ஆறுமாதகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
வன்முறை பின்னணி: மணிப்பூரில் 38 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் 53 சதவீதம் பேர் மைத்தி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.மாநிலத்தில் குகி, நாகா, அங்கமிஸ், லூசாயிஸ், தாட்வாஸ் உள்ளிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் மைத்தி சமுதாய மக்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3-ம் தேதி குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3-ம் தேதி அமைதிப் பேரணி நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும்மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இணைய சேவைகள் தடைசெய்யப்பட்டன. மாநிலத்தில் முழுமையாக இணைய சேவை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...