Published : 22 Jun 2023 04:51 AM
Last Updated : 22 Jun 2023 04:51 AM
மும்பை: மும்பையில் கரோனா சிகிச்சைக்கான கள மருத்துவமனை ஒப்பந்தத்தில் நிதி முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வால், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர்களுக்கு நெருக்கமானவர்களில் வீடுகளில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பரவல் ஏற்பட்டபோது, அதற்கான சிகிச்சைகளை அளிக்க மும்பையின் பல இடங்களில் கள மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தங்கள் சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) தலைவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆதித்ய தாக்கரேவின் நண்பர் சூரஜ் சவான், சஞ்சய் ராவத்தின் நெருங்கிய நண்பர் சுஜித் பட்கர், அவரின் பங்குதாரர்கள் ஹேமந்த் குப்தா, சஞ்சய் ஷா, ராஜூ சலுங்கே ஆகியோர் ‘லைப்லைன் ஹாஸ்பிடல் மேஜேன்மென்ட் சர்வீசஸ்’(எல்எச்எம்எஸ்) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இது பதிவு செய்யப்படாத நிறுவனம். சுகாதார சேவையில் இந்நிறுவனத்துக்கு எந்த முன் அனுபவமும் இல்லை. ஆனாலும், கரோனா கள மருத்துவமனை மற்றும் சிகிச்சை தொடர்பான ஒப்பந்தங்களை இந்நிறுவனம் தொடர்ந்து பெற்றுவந்துள்ளது.
கரோனா கள மருத்துவமனை அமைக்கும் ஒப்பந்தங்களை மும்பை மாநகராட்சி எல்எச்எம்எஸ் நிறுவனத்துக்கு மிக அதிக தொகைக்கு முறைகேடாக வழங்கியதாக பாஜக தலைவர் கிரித் சோமையா என்பவர் கடந்தாண்டு புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக எல்எச்எம்எஸ் நிறுவனம் மீது ஆசாத் மைதான் காவல் நிலையம் மோசடி வழக்கு பதிவு செய்திருந்தது. அதன்பின், இந்த வழக்கு பொருளாதா குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை, சுஜித் பட்கர் உள்ளிட்ட பலர் மீது நிதி மோசடி வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான விவரங்களை மும்பை மாநாகராட்சி ஆணையர் சாகலிடம் இரு்நது அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் பெற்றது.
இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக மும்பை, தானே, நவி மும்பை ஆகிய பகுதிகளில் 15 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. மும்பை மாநாகராட்சியில் கூடுதல் ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் ஜெய்ஸ்வால், ஆதித்ய தாக்கரேவின் நெருங்கிய நண்பர் சூரஜ் சவான், சுஜித் பட்கர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT