Published : 19 Jul 2014 11:43 AM
Last Updated : 19 Jul 2014 11:43 AM

4 வயது குழந்தையை தாய் - தந்தை பந்தாடுவதா?: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

நான்கு வயது குழந்தையை தந்தை யும், தாயும் மாறிமாறி வைத்து பந்தாடுவது போன்று தீர்ப்பளித் துள்ளதாக சென்னை உயர் நீதி மன்றம் மீது உச்ச நீதிமன்ற நீதிபதி கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ரேணுகா தேவி கார்த்திகேயன் தம்பதியின் குடும்ப பிரச்சினையை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவர்களது நான்கு வயது பெண் குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தீர்ப்பளித்திருந்தது. அதன்படி, அக்குழந்தை வாரத்தில் நான்கு நாட்கள் தாயிடமும், மூன்று நாட் கள் தந்தையிடமும் இருக்க வேண் டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நரிமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தந்தை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ‘குழந்தையை தந்தை ஏற்கனவே பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். குழந்தையின் நலனைக் காப்பதில் தாய்க்கு எந்த தகுதியும் இல்லை. எனவே, குழந்தை தந்தையுடன் தான் இருக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

தாய் ரேணுகாதேவி தரப்பில், மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆஜராகி, ‘குழந்தையை தந்தை கார்த்திகேயன் துாக்கிச் சென்று விட்டார். தாயிடம் மீண்டும் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்,’ என்ற வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நான்கு வயது குழந்தையை வைத்து தாயும் தந்தையும் இறகுப்பந்து விளையாடுவது போல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வருத்தத்துக்கு உரியது. குழந்தையின் நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை. இந்த தீர்ப்பில் எங்களுக்கு திருப்தி இல்லை. இப்படி ஒரு தீர்ப்பளிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை’ என்று தெரிவித்தனர்.

குழந்தையை வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று தந்தைக்கு உத்தரவிட்டனர். மேலும், இப்பிரச்னையில் சமரசமாக தீர்வு காண குடும்பநல ஆலோசகர்கள் மாதவி திவான், வி.மோகனா ஆகியோரையும் நியமித்து, இருதரப்பிலும் பேசி நல்ல முடிவு எடுக்க உதவும்படி நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x