Last Updated : 28 Oct, 2017 02:44 PM

 

Published : 28 Oct 2017 02:44 PM
Last Updated : 28 Oct 2017 02:44 PM

நெடுஞ்சாலை திட்டத்தைப் போல தேசிய அளவில் நீர்ப்பாசன திட்டம்: மத்திய அரசுக்கு யோசனை தெரிவிக்கும் பொருளாதார நிபுணர்கள், விவசாயிகள்

மத்திய அரசு தேசிய அளவில் சாலைகள் அமைப்பது போல, தேசிய அளவில் நீர்ப்பாசன திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும், அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் ஊக்கம் பெரும் என பொருளாதார நிபுணர்களும், விவசாயிகளும் அரசுக்கு யோசனை தெரிவிக்கின்றனர்.

நாடுமுழுவதும் விரைவான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் வகையில், பாரத் மாலா என்ற பெயரில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோன்று கிராமப்புற வளர்ச்சிக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தேசிய அளவில் நீர்ப்பாசன திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என கூறுகிறார் பொருளாதார நிபுணர் எம்.ஆர். வெங்கடேஷ்.

இதுகுறித்து அவர் கூறுகையில்

‘‘பாரத் மாலா என்ற பெயரில் நாடுமுழுவதும் சாலைகள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, வரவேற்கத்தக்கது. பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது ஒரு நாடு, சாலை போன்ற உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது, பொருளாதாரம் வேகமெடுக்க வழிகோலும்.

உலக பொருளாதார பெருமந்தம் நிலவிய 1930ம் ஆண்டுகளில் தான், அமெரிக்காவில் கிழக்கு கடற்கரை முதல் மேற்கு கடற்கரை வரையிலும், வடக்கில் இருந்து தெற்கு வரையிலும் சாலைகள் அமைக்கப்பட்டன. இதனால், அந்நாட்டில், சாலை போக்குவரத்து மேம்பட்டு, வர்த்தகத்திற்கு பேருதவியாக அமைந்தது.

இதுபோலவே, இந்தியாவில் பொருளாதார சிக்கல் நிலவிய 1998ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு தங்க நாற்கர சாலை திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம், விரைவான போக்குவரத்து வசதி கிடைத்ததுடன், பொருளாதாரத்திற்கு ஊக்கமாக அமைந்தது.

இதுபோலே தான், தற்போதைய மத்திய அரசும், பாரத் மாலா என்ற பெயரில் புதிய சாலைகள் அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி சாலைகள் அமைத்தால் பொருளாதாரத்திற்கு பெரிய உந்துதலாக அமையும். ஆனால் இதுமட்டும் போதாது.

பொருளாதாரத்திற்கு மேலும் ஊக்கம் தர, தேசிய அளவில் நீர்ப்பாசன திட்டங்களை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நாள்தோறும் 30 கிலோ மீட்டர் புதிய நெடுஞ்சாலைகள் அமைப்பது என இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதுபோலவே, நாள்தோறும் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீர்ப்பாசன திட்டங்களை ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு பணியாற்ற வேண்டும். நமது விவசாயிகளுக்கு இப்போதைய உடனடி தேவை நீர்ப்பாசனம் தான்.

நீர்ப்பாசனம் இல்லாததால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு வறண்டு கிடக்கிறது. எந்த சாகுபடியும் செய்யப்படுவதில்லை. இந்த பகுதியில் சாகுபடி நடந்தால் விவசாயிகளின் வருவாய் பெருகும். கிராமப் பொருளாதாரம் மேம்படும். பயிர் செய்த தானியங்களுக்கான ஆதார விலையை உயர்த்தி அறிவிப்பதைவிட, விவசாயிகளுக்கு, நீர்ப்பாசன வசதி செய்து தருவதே முதல் தேவையாக இருக்கும். புதிய நீர்ப்பாசன வசதிக்காக மத்திய அரசு செய்யும் செலவு பெரிய அளவில் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, அரசுக்கும் எதிர்காலத்தில் வருவாய் கொடுக்கும், நீர்ப்பாசன திட்டங்களில் மத்திய அரசு ஒரு ரூபாய் முதலீடு செய்தால், அது, ஐந்து ரூபாயாக திரும்பி வர வாய்ப்புள்ளது.

இந்தியாவில் தற்போது ஒரு தனிநபருக்கு 420 கிராம் என்ற அளவில் மட்டுமே உணவு உற்பத்தி நடைபெறுகிறது. மற்ற பல வளர்ந்துவரும் நாடுகளில்கூட, நபருக்கு 600 கிராம் வீதம் உணவு உற்பத்தி செய்யப்படும் நிலையில், நமது உணவு உற்பத்தி மிகவும் குறைவே. இதற்குக் காரணம் போதிய நீர்ப்பாசன வசதிகள் இல்லாததுதான். எனவே, மத்திய அரசு தேசிய அளவில் நீர்ப்பாசன திட்டங்களை அவசர முன்னரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டும்’’ என அவர் கூறினார்.

விவசாய சங்கங்கள் சொல்வது என்ன?

இதுபற்றி, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறுகையில் ‘‘தேசிய அளவில் சாலை அமைக்கும் திட்டத்தைப் போல நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வரவேற்கதக்கது. தமிழகத்தில் அனைத்து வளங்களும், நிலப்பரப்பும், விவசாயிகளின் உழைப்பு திறனும் இருந்தும் நீர் இல்லாத காரணத்தால் சாகுபடி பொய்த்துப் போகிறது.

தமிழகத்தில் கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் அமைத்தால் வெள்ள காலத்தில், தண்ணீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்க முடியும். தென்பெண்ணை ஆற்றில் சமீபத்தில் ஓடிய தண்ணீர் முழுவதும் வீணாக கடலுக்குச் சென்றுள்ளது. உரிய தடுப்பணைகள் இல்லாததே இதற்குக் காரணம்.

தமிழகத்தில் இதுபோன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். தமிழகத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்களின் சமூக மேம்பாட்டு நிதியில் இருந்து செலவு செய்ய வாய்ப்புள்ளது.

அதுபோலவே, தேசிய அளவில் நதிகளை இணைக்கும் திட்டமும் நீண்ட காலமாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. நாட்டின் ஒருபுறம் அளவுக்கு அதிகமான தண்ணீரால் சேதம் ஏற்படுகிறது. மற்றொருபுறம் தண்ணீர் இன்றி வறட்சி ஏற்படுகிறது. எனவே கங்கை - காவிரி இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்’’ என அவர் கூறினார்.

இதுபற்றி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லசாமி கூறுகையில்

‘‘முதல் ஐந்தாண்டு திட்டங்களில் போதிய அளவு விவசாயத்திற்கும், நீர்ப்பாசன திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டதால்தான் நாடுமுழுவதும் பெரிய அணைகள் கட்டப்பட்டன. ஏராளமான நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதன் பிறகு விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை மத்திய அரசு குறைத்துக் கொண்டது. பெரிய அளவில் நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது வரவேற்கதக்கது.

கேரள நதிகளை, தமிழக நதிகளுடன் இணைத்தால் பெரிய அளவில் பாசன வசதி ஏற்படும். பாண்டியாறு, புன்னம் புழா திட்டம் பற்றி நீண்ட காலமாக பேசி வருகிறோம். ஆனால் இதை செயல்படுத்தவில்லை. ஆந்திராவில் பாலாறு 30 கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே பயணிக்கிறது. அதில், 30 தடுப்பணைகளை அம்மாநிலம் கட்டியுள்ளது. ஆனால், தமிழகத்தில் 250 கிலோ மீட்டர் பயணிக்கும் பாலாற்றில் ஒரே ஒரு தடுப்பணை மட்டுமே உள்ளது. நீர் நிலைகளை பராமரித்து, நீர்ப்பாசன வசதியை மேற்படுத்த அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதற்கு தனியாரின் பங்களிப்பையும் நாடலாம்’’ என அவர் கூறினார்.

சாலைகள் அமைக்கும் போது சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியும் என்பதால், நெடுஞ்சாலை திட்டங்களில் தனியார் ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது. ஆனால், நீர்ப்பாசன திட்டங்கள் மூலம் உடனடியாக வருவாய் ஈட்ட முடியாது என்பதால் இதில் தனியார் பங்களிப்பு எந்த அளவில் இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சமூக நோக்கு மட்டுமின்றி வருவாய் வாய்ப்பு உள்ள வகையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்புள்ளது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x