Published : 21 Jun 2023 07:44 PM
Last Updated : 21 Jun 2023 07:44 PM

“யோகா... காப்புரிமை, ராயல்டி ஏதுமற்ற இலவசமானது” - ஐ.நா. யோகா நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு

ஐநா சபை: பதிப்புரிமை, காப்புரிமை, ராயல்டி ஆகியவை இன்றி யோகா இலவசமானது என ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சர்வதேச யோகா தினம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. ஐநா உயரதிகாரிகள், 180-க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: "உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சியடைகிறேன். வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இன்று கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டினரும் இங்கு பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் அழைப்பின் பேரில் 180-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைவது வரலாற்று சிறப்புமிக்கது; இதற்கு முன் நடந்திராதது. யோகா என்றால் ஒன்றுபடுவது. எனவே, நீங்கள் ஒன்று சேர்வது என்பது யோகாவின் மற்றொரு வடிவத்தின் வெளிப்பாடு.

ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரை, அதாவது பூமியின் இரு துருவங்களும் யோகாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த தனித்துவமான கொண்டாட்டத்தில் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் சுய விருப்பத்தின் பேரில் பங்கேற்பது யோகாவின் பரந்த தன்மையையும் புகழையும் காட்டுகிறது. நம்மை ஒன்றிணைப்பது யோகா என்று முனிவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆரோக்கியத்தையும், வலிமையையும் யோகா மூலம் தாங்கள் பெறுவதாக பல ஆண்டுகளாக இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு வருபவர்கள் தாங்கள் எழுதிய யோக நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆரோக்கியமான, சக்திவாய்ந்த சமுதாயத்தை யோகா உருவாக்குகிறது.

இந்தியாவின் கலாச்சாரம், அதன் சமூக அமைப்பு, அதன் ஆன்மீகம், அதன் லட்சியம், அதன் தத்துவம், அதன் தொலைநோக்கு ஆகியவை எப்போதும் ஒன்றிணைந்து செயல்படுவது, ஏற்றுக்கொள்வது, அரவணைத்துச் செல்வது ஆகியவைதான். இவைதான் இந்திய மரபுகளை வளர்த்து வருகின்றன. இந்தியர்கள் புதிய யோசனைகளை வரவேற்று அவற்றைப் பாதுகாத்துள்ளனர். யோகா அத்தகைய உணர்வுகளை வலுப்படுத்துகிறது; உள் பார்வையை விரிவுபடுத்துகிறது.

யோகா உயிரினத்தின் ஒற்றுமையை உணர வைக்கிறது, இது உயிரினங்களுக்கு அன்பின் அடிப்படையை அளிக்கிறது. எனவே, யோகா மூலம் நமது முரண்பாடுகள், தடைகள், எதிர்ப்புகளை நாம் நீக்கிக்கொள்ள வேண்டும். பதிப்புரிமை, காப்புரிமை, ராயல்டி ஆகியவை ஏதுமின்றி யோகா இலவசமானது" என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x