Published : 21 Jun 2023 05:16 PM
Last Updated : 21 Jun 2023 05:16 PM

அருணாச்சலை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு

சீன எல்லையை ஒட்டிய அருணாச்சலப் பிரதேச பகுதியில் பயிற்சி மேற்கொள்ளும் இந்திய ராணுவ வீரர்கள் | கோப்புப் படம்

வாஷிங்டன்: அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு செய்துள்ளது.

மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை இன்று (ஜூன் 21) பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு செய்துள்ளது. இந்திய - சீன எல்லையில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியை மாற்ற சீனா, ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது, ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றை இந்தத் தீர்மானம் கண்டிக்கிறது.

அதோடு, இந்திய எல்லையை ஒட்டிய கிராமங்களில் குடியிருப்புகளை அதிகரிக்கச் செய்வது, கட்டுமானங்களை அதிகரிப்பது, அருணாச்சலப் பிரதேசத்தின் நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களை மாண்டரின் மொழி பெயர்களுடன் வரைபடங்கள் வெளியிடுவது, பூடானை உரிமை கோருவது ஆகிய சீன நடவடிக்கைகளை தீர்மானம் கண்டிக்கிறது.

இந்த தீர்மானம், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜெஃப் மெர்க்லி மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பில் ஹகெர்டி ஆகியோரால் இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்கும் இந்தத் தீர்மானம், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியக் குடியரசின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கிறது.

அருணாச்சலப் பிரதேசத்தை ஜங்னான் என்று சீனா குறிப்பிடுகிறது. அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் அந்நாடு கூறுகிறது. அருணாச்சலப் பிரதேசத்துக்கு இந்தியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் வரும்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x