Published : 21 Jun 2023 03:49 PM
Last Updated : 21 Jun 2023 03:49 PM

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு யோகா செய்யும் படத்தை ட்வீட் செய்த காங்கிரஸ் கட்சி

புதுடெல்லி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு யோகா செய்யும் படத்தை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்ததை அடுத்து 9-வது ஆண்டாக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு யோகா செய்யும் படத்தை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும், "சர்வதேச யோகா தினத்தில் பண்டித நேருவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். யோகாவை பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் அவர். யோகாவை தேசிய கொள்கையின் ஒரு பகுதியாகவும் ஆக்கினார். உடல் மற்றும் மனதின் நலனுக்கான இந்த தொன்மையான கலையை, தத்துவத்தை பாராட்டுவோம்; யோகாவை வாழ்வின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்வோம்" என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், "உண்மை! இன்றைய தினத்தை சர்வதேச யோகா தினமாக ஐ.நா மூலம் அறிவிக்கச் செய்து இதனை சர்வதேச அளவில் பிரபலப்படுத்திய நமது அரசாங்கம், பிரதமர் அலுவலகம், வெளியுறவுத்துறை உள்பட அனைவரையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். யோகா நமது மென் சக்தியின் ஒரு முக்கிய அங்கம். இதை நான் பல பத்தாண்டுகளாகக் கூறி வருகிறேன். யோகாவுக்கு தற்போது கிடைத்திருக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சி அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

உலகம் ஒரு குடும்பம் என்பதே இந்த ஆண்டின் சர்வதேச யோகா தின கருப்பொருள். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உலகிற்கான இந்தியாவின் கொடை யோகா என குறிப்பிட்டார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். முன்னதாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இந்தியாவின் அழைப்பை ஏற்று 180க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்திருப்பது வரலாற்று நிகழ்வு. இதற்கு முன் இப்படி நடந்தது இல்லை" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x