Published : 21 Jun 2023 12:24 PM
Last Updated : 21 Jun 2023 12:24 PM
புனே: என்சிஆர்டி பாடப்புத்தகத்தில் இருந்து டார்வினின் பரிணாமக் கோட்பாடு நீக்கப்பட்டுள்ளது என்ற சர்ச்சைக்கு பதில் அளித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 'அப்படி ஒன்றும் நடக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள பண்டார்கர் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்-ல் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், "தற்போது ஒரு என்சிஆர்டி பாடப்புத்தகம் குறித்து ஒரு சர்ச்சை நிலவி வருகிறது. அதாவது அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு நீக்கப்பட்டுவிட்டது என்றும், கால அட்டவணையை விட்டுவிட்டதாகவும் சர்ச்சை நிலவுகிறது. ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று வெளிப்படையாக இங்கே கூறவிரும்புகிறேன்.
இப்படி ஒரு சர்ச்சை வெளியான பின்னர் தன்னாட்சி அமைப்பான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் பேசினேன். அதற்கு அவர்கள், கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தின் போது பாடத்தில் மீண்டும் மீண்டும் வரும் சில பகுதிகள் குறைக்கப்பட்டு பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டது. எனவே 8 மற்றும் 9 வகுப்புகளுக்கான பகுதிகளில் மாற்றம் செய்யப்படவில்லை. 10 ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பரிணாமக் கோட்பாடு பற்றிய சில பகுதிகள் கடந்த ஆண்டு விலக்கப்பட்டது. 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் அவை மாற்றப்படவில்லை.
இதனால் பத்தாம் வகுப்புக்கு பின்னர் அறிவியலைப் பாடமாக எடுத்துப்படிக்காத மாணவர்கள் டார்வினின் பரிணாமக் கோட்பாடு பற்றி சில குறிப்பிட்ட விஷயத்தை அறியமுடியாமல் போகிறது என்ற ஒரு பார்வை இங்கு உள்ளது. அது சரியான ஒன்றுதான்.
கால அட்டவணை 9ஆம் வகுப்பில் கற்பிக்கப்படுகிறது, அதேபோல் 11 மற்றும் 12 வகுப்புகளிலும் அவை கற்பிக்கப்படுகின்றன. என்சிஆர்டியின் கருத்துப்படி ஒன்றிரண்டு உதாரணங்கள் (பரிணாமக் கோட்பாடு தொடர்பான) நீக்கப்பட்டுள்ளன. ஆனால், புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்". இவ்வாறு அமைச்சர் பேசினார்.
அவை எங்கள் புத்தகங்கள் இல்லை: முன்னதாக என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ் சக்லானிக்கு, ஜூன் 15-ம் தேதி பாடநூல் மேம்பாட்டுக் குழுவில் அங்கம் வகித்து வரும் 33 கல்வியாளர்கள், பாடப் புத்தகங்களில் இருந்து தங்களின் பெயர்களை நீக்கக் கோரி கடிதம் எழுதி இருந்தனர்.
அந்தக் கடிதத்தில் அவர்கள், "மூல புத்தகத்தில் இருந்து தற்போது உள்ள புத்தகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திருத்தங்கள், அப்புத்தகங்களை வேறு ஒன்றாக உருவாக்கிக் காட்டுகின்றன. இதனால் அவைகள் நாங்கள் உருவாக்கிய புத்தகம் என்று கூறுவதும் அவற்றை எங்களின் பெயருடன் இணைப்பது கடினம் என்றும் நாங்கள் உணருகிறோம். எங்களுடைய ஆக்கபூர்வமான கூட்டு முயற்சி ஆபத்தில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.
அந்தப் பாடப் புத்தகங்கள் பல்வேறு பின்புலம் மற்றும் கருத்தியல்களில் அரசியல் விஞ்ஞானிகளின் விவாதங்கள் மற்றும் ஒத்துழைப்புகளினால் உருவாக்கப்பட்டவை. அவை இந்திய சுதந்திரப் போராட்டம், அரசியலமைப்பு உருவாக்கம், ஜனநாயக செயல்பாடு மற்றும் இந்திய அரசியலின் முக்கிய அம்சங்களுடன் சர்வதேச வளர்ச்சி மற்றும் அரசியல் அறிவியல் பற்றிய கோட்பாடு அறிவினை வழங்குவதை நோக்கமாக கொண்டவை" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT