Published : 21 Jun 2023 09:57 AM
Last Updated : 21 Jun 2023 09:57 AM

முரண்களை யோகா மூலம் முறியடிக்க வேண்டும்: சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி அறிவுரை

அமெரிக்காவில் பிரதமர் மோடி

நியூயார்க்: சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், "நாம் யோகா மூலம் முரண்களை முறியடிக்க வேண்டும், எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டும், தடுப்புகளை தகர்க்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் தலைமையகத்தில் இன்று (ஜூன் 21-ம் தேதி) நடைபெறும் யோக அமர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார்.

இதனையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்தியர்கள் எப்போதுமே புதிய சிந்தனைகளை வரவேற்றுப் பாதுகாத்துள்ளனர். தேசத்தின் வளமான பன்முகத்தன்மையை கொண்டாடுகின்றனர். இதுபோன்ற பண்புகளை யோகா வலுப்படுத்துகிறது. யோகா நம் மனதையும் உடலையும் ஒருமைப்படுத்தும். சிந்தனையையும் செயலையும் ஒருங்கிணைக்கும். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் இணக்கத்தை உண்டாக்கும்.

யோகா செய்வதென்பது நம் உள்ளார்ந்த பார்வையை விரிவுபடுத்துகிறது. அது நம் ஆன்மாவுடன் தொடர்பை ஏற்படுத்துகிறது. அனைவரையும் அன்பு செய்யும் எண்ணத்தை உருவாக்குகிறது.

ஆகையால் நாம் நன் முரண்களை யோகாவால் முறியடிக்க வேண்டும். எதிர்ப்புகளை யோகாவால் எதிர்கொள்ள வேண்டும். தடைகளை யோகாவால் தகர்க்க வேண்டும். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கொள்கையை நாம் உலகுக்கு முன்னுதாராணமாக கடைப்பிடித்துக் காட்ட வேண்டும். "வசுதைவ குடும்பகம்" (உலகம் ஒரே குடும்பம்) என்ற கருப்பொருளுடன் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் யோகா செய்கிறார்கள். சர்வதேச யோகா தினத்தின் மூலம் யோகா உலகளாவிய இயக்கமாக மாறியுள்ளது. யோகா உலகை இணைக்கிறது" என்றார்.

சர்வதேச யோகா தின வரலாறு: யோகா பயிற்சியால் ஏற்படும் பல நன்மைகள் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜூன் 21-ம் தேதியை யோக தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட ஐ.நா. சபை, ஜூன் 21-ம் தேதி உலக முழுவதும் யோகா தினம் கொண்டாடப்படும் என்று 2014 டிசம்பரில் அறிவித்தது.

இந்த நிலையில், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் 9-வது சர்வதேச யோகா தின கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா.வில் நடைபெறும் யோகா அமர்வுக்கு பிரதமர் மோடி தலையைமையேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x