Last Updated : 04 Oct, 2017 02:38 PM

 

Published : 04 Oct 2017 02:38 PM
Last Updated : 04 Oct 2017 02:38 PM

மத்திய இந்தியாவில் பெருமழைப் பொழிவு 3 மடங்கு அதிகமானதன் காரணம் என்ன?

 

வங்காள விரிகுடாவை விட அரபிக்கடல் அதிக ஈரப்பதத்தை காற்றில் சேர்ப்பதால் திடீர் கனமழை, அகால மழைகள், அதி தீவிர பெருமழைகள் திடீரென ஏற்படுவது மத்திய இந்தியாவில் 3 மடங்கு அதிகமாகியுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

1950 முதல் 2015 வரை கோடைகால (ஜூன் முதல் செப்டம்பர் வரை) பருவமழை காற்று பலவீனமடைந்ததால் மழை அளவு சராசரியாக 10% குறைந்து வந்துள்ளது.

ஆனால் இதே காலக்கட்டத்தில் மத்திய இந்தியாவில் (மேற்கில் குஜராத் முதல் கிழக்கில் ஒடிசா, அசாம் வரை) நாளொன்றுக்கு 150 மிமீ மழை குறைந்தது 3 நாட்களுக்குப் பெய்யும் தீவிர கனமழை நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

1950 முதல் 2015-ம் ஆண்டு வரை இத்தகைய கோடைகால மழையின் அளவு 3 மடங்கு அதிகரித்துள்ளது. 1950ம் ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 2 தீவிர மழை நிகழ்வுகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் சமீபகாலங்களில் ஆண்டுக்கு 6 தீவிர மழை நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

இந்த நூற்றாண்டின் முடிவில் இந்தியத் துணைக் கண்டம் முழுதுமே இத்தகைய திடீர் கனமழைகள் அதிகம் பெய்யும் என்று ஆய்வுக்கான மாதிரியை முன் வைத்து ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

“பருவமழை காற்றுகள் பலவீனமடைந்ததால் இந்தியத் துணைக்கண்டத்துக்கு ஈரப்பதம் அதிகம் வருவதில்லை. வடக்கு அரபிக் கடல் உஷ்ணமடைந்ததன் காரணமாக பருவ மழைக் காற்றுகளில் கடும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மேலதிகமான ஈரப்பதம் அவ்வப்போது காற்றுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த ஈரப்பத அதிகரிப்பு நிகழ்வுகள் திடீர் பருவமழையாகி, மத்திய இந்தியாவில் தீவிர கனமழை நிகழ்வுகளாக மாறுகிறது” என்று புனே இந்திய வானியல் ஆய்வு மைய வானிலை மாற்ற மையத்தின் டாக்டர் ராக்ஸி மேத்யூ கோல் தெரிவித்தார்.

வெப்ப நிலை வித்தியாசம்

மத்திய இந்தியப் பெருங்கடல் உஷ்ணமடைந்த அளவுக்கு இந்திய தீபகற்பப் பகுதி அவ்வளவு உஷ்ணமடையவில்லை. “காற்றில் ஈரப்பதம் மற்றும் நிலம்-கடன் வெப்ப அளவு வித்தியாசக் குறைவு ஆகியவையே சமீபகாலங்களில் பருவமழை காற்றுகள் பலவீனமடைந்து பருவமழை பொழிவுக் குறைவுக்கும் காரணமாக ஒருவேளை இருக்க வாய்ப்புண்டு” என்றார் டாக்ட்யர் ராக்ஸி மேத்யூ கோல்.

இதே வேளையில் வடக்கு அரபிக் கடல் மேலதிகமாக உஷ்ணமாகி வருகிறது, இதனால் அதன் காற்றில் அதிகமான ஈரப்பதம் சேர்கிறது, அதாவது ஒவ்வொரு தீவிர கனமழை, மேகவெடிப்பு மழை நிகழ்வுகளுக்கு முன்னதாகவும் வடக்கு அரபிக் கடல் நீர் 1-2 டிகிரி செல்சியஸ் வெப்பமடைகிறது. இதனால் நீர் ஆவியாகும் அளவு 20-40% அதிகமாகிறது. இதுதான் மத்திய இந்தியாவின் தீவிர திடீர் மழைக்குக் காரணமாகிறது.

இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.

“வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் சேர்ந்து கொண்டு சேர்க்கும் ஈரப்பதத்தை விட அரபிக்கடல் அதிக ஈரப்பதத்தை ஏற்படுத்துகிறது, இதுதான் மத்திய இந்தியாவின் மொத்த ஈரப்பதத்தில் 36% பங்களிப்பு செய்கிறது, என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x