Published : 20 Jun 2023 12:54 PM
Last Updated : 20 Jun 2023 12:54 PM
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் தீவிரமடைந்துள்ள மழைவெள்ளத்தால் 10 மாவட்டங்களில் சுமார் 31,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: "சிராங், தர்ராங், திமாஜ், துப்ரி, திப்ருகார், கோக்ரஜ்கர், லக்கிம்பூர், நல்பரி, சோனிட்புர் மற்றும் உடல்குரி உள்ளிட்ட மாவட்டங்களில் 30,700 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். லக்கிம்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 22,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். திப்ருகர் மாவட்டத்தில் 3,800-க்கும் அதிகமானோரும், கோக்ரஜ்கர் மாவட்டத்தில் 1,800-க்கும் அதிகமானோரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு சார்பில் 7 மாவட்டங்களில் 25 நிவாரண பொருள்கள் விநியோக மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், நிவாரண முகாம்கள் அமைக்கப்படவில்லை. தற்போது வரை 444 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 4,741.23 ஏக்கர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. பிஸ்வநாத், துப்ரி, திப்ருகர், கோலாகட், கம்ருப், கரீம்கஞ்ச், கோக்ராஜ்கர், லக்கிம்பூர், மஜுலி, நாகன், நல்பரி, சிவசாகர், தெற்கு சல்மாரா, டமுல்புர் மற்றும் உடல்குரி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. திமா ஹசோ, கம்ருப் மெட்ரோபாலிட்டன் மற்றும் கரீம்கஞ்ச் பகுதிகளில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
சோனிட்புர், நகோன், நல்பரி, பாக்சா, சிரங்க், தர்ராங், திமாஜ், கோல்பரா, கோல்கட், கம்ருப்ஸ கோக்ரஜ்கர், லக்கிம்பூர், திப்ருகர், கரீம்ரஞ்ச் மற்றும் உடல்குரி மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் பிற உள்கட்டமைப்பு வசதிகள் சேதமைடந்துள்ளன. பிரம்மபுத்திரா நதியின் துணை நதியான கோபிலி நதி அபாய அளவினை தாண்டி ஓடுகிறது." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்திற்கு ‘ரெட் அலார்ட்’ விடுத்து, அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது. கவுகாத்தி மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த சிறப்பு வானிலை அறிவிப்பில், திங்கள் கிழமைத் தொடங்கி 24 மணிநேரத்திற்கு மாநிலத்திற்கு ரெட் அலார்ட்டும், அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்ச் அலார்ட்டும், வியாழக்கிழமைக்கு மஞ்சள் அலார்ட்டும் விடுத்திருந்தது. ரெட் அலார்ட் - உடனடியாக நடவடிக்கைகளுக்காகவும், ஆரஞ்ச் அலார்ட் - நடவடிக்கைக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மஞ்சள் அலார்ட் - மேலதிக அறிவிப்புகளுக்காக காத்திருக்க வேண்டும் என்பதற்காகவும் வழங்கப்படுகின்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT