Published : 20 Jun 2023 08:42 AM
Last Updated : 20 Jun 2023 08:42 AM

அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் ஜேக்கப்பின் சிறப்பு அழைப்பின்பேரில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். அமெரிக்கா புறப்படும் முன்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அமெரிக்காவுக்குப் புறப்படுகிறேன். நியூயார்க் நகரம் மற்றும் வாஷிங்டன் டிசியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறேன். இதில், ஐநா தலைமையகத்தில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டங்கள், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உடனான பேச்சு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரை உள்ளிட்டவை அடங்கும்.

அமெரிக்காவில், வணிகத் தலைவர்களைச் சந்திக்கவும், இந்திய சமூகத்துடன் கலந்துரையாடவும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிந்தனைத் தலைவர்களைச் சந்திக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும். வர்த்தகம், புத்தாக்கம், தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் இந்திய - அமெரிக்க உறவுகளை ஆழப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.

முதலில், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஐ.நா. சபை தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்கிறார். பின்னர், அங்கிருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு செல்லும் மோடி, நாளை இரவு அதிபர் ஜோ பைடன் தம்பதியர் வெள்ளை மாளிகையில் அளிக்கும் சிறப்பு இரவு விருந்தில் பங்கேற்கிறார். இதில் 7,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரும் பங்கேற்க உள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் நாளை மறுதினம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அன்று இரவு அமெரிக்க அரசு சார்பில் அதிபர் ஜோ பைடன் அளிக்கும் இரவு விருந்தில் கலந்துகொள்கிறார். 23-ம் தேதி அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசுகிறார். பின்னர், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்கிறார். பிறகு அமெரிக்காவின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்களை சந்தித்துப் பேசுகிறார். 23-ம் தேதி இரவு இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். 2 மணி நேரம் நடைபெறும் இக்கூட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 இந்திய வம்சாவளியினர் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

இந்த பயணத்தின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்கள் முக்கியத்துவம் பெறும். தொழில், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம், தொலைத்தொடர்பு, விண்வெளி உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று டெல்லியில் மத்திய வெளியுறவு துறை செயலர் வினய் மோகன் குவாத்ரா கூறினார். உலகின் மிக நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமே வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்படும். அதிபர் ஜோ பைடன் பதவியேற்ற பிறகு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆகியோருக்கு மட்டுமே அங்கு சிறப்பு இரவு விருந்து அளித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அவர் விருந்து அளிக்கும் 3-வது உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார். இரு நாடுகள் இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒப்பந்தம் கையெழுத்து: இப்பயணத்தின்போது, பாதுகாப்பு துறை சார்ந்த விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும். குறிப்பாக, போர் விமானங்களுக்கு தேவையான இன்ஜின்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து பிரதமர் மோடியும் அதிபர் பைடனும் ஆலோசனை நடத்துவார்கள். இதுதொடர்பாக அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் - இந்தியாவின் எச்ஏஎல் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. இதன்படி போர் விமானங்களுக்கான 100 ஜெட் இன்ஜின்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அமெரிக்க நகரங்களில் மோடியை வரவேற்று பேரணி: பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு தலைநகர் வாஷிங்டன் உட்பட 20 அமெரிக்க நகரங்களில் நேற்று முன்தினம் பேரணிகள் நடைபெற்றன. இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற இப்பேரணிகளில் ‘மோடி, மோடி’ கோஷம் விண்ணை எட்டியது. வந்தே மாதரம் பாடலும் இசைக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அமெரிக்க நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, வரும் 24, 25-ம் தேதிகளில் எகிப்தில் மோடி பயணம் மேற்கொள்கிறார். அப்போது, தலைநகர் கெய்ரோவில் உள்ள அல்-ஹக்கீம் மசூதிக்கு செல்கிறார். கடந்த 11-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த மசூதியை இந்தியாவை சேர்ந்த தாவூதி போரா முஸ்லிம்கள் தங்கள் சொந்த செலவில் மறுகட்டமைப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதலாம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்கள் உட்பட அனைத்து வீரர்கள் நினைவாக கெய்ரோவில் புதிய நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்லும் பிரதமர் மோடி, நினைவிடத்தில் வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x